சிகாகோ (அமெரிக்கா): பயங்கரவாதத்துக்கு அளிக்கும் ஆதரவை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க முடியும் என்று சிகாகோவில் பாகிஸ்தான் மாணவரின் கேள்விக்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். சிகாகோ பல்கலைக்கழக மாணவர்களுடன் நடத்திய கலந்துரையாடலின்போது, இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடப்பதற்கான வாய்ப்பு குறித்து பாகிஸ்தான் மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் ஆதரவும் ஊக்கமும் அளிப்பது இந்தியாவுக்கு மிகப் பெரிய சிக்கலாக உள்ளது.
எங்கள் நாட்டைச் சேர்ந்த அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை ஏற்றுக்கொண்டு, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது சாத்தியமற்றது. எனவே, பயங்கரவாதத்துக்கு அளிக்கப்படும் ஆதரவு நிறுத்தப்படும் பட்சத்தில், பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான சூழல் உருவாகலாம்.” என தெரிவித்தார்.
மேலும் அவர், “ஈரான் மற்றும் அமெரிக்காவுடன் பாகிஸ்தான் தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியா வெறும் பார்வையாளராக மட்டும் இருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே இந்தியா எப்போதும் நுணுக்கமான புவிசார் அரசியல் புரிதலைக் கொண்டிருந்தது. எங்களுக்கென்று தனிப்பட்ட தொலைநோக்குப் பார்வை இருந்தது. இந்தியாவின் நலன்களே எங்கள் வெளியுறவுக் கொள்கையை வழிநடத்தின.
இந்தியாவின் பரப்பளவு, வரலாறு, பிற நாடுகளுடனான உறவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால், இத்தகைய உலகளாவிய விவாதங்களில் இந்தியா முக்கிய பங்காற்றியிருக்க வேண்டும்.
வெளிப்படையாகச் சொன்னால், இந்தியா இன்று ஒரு இரண்டாம் நிலை பங்கேற்பாளராக மாறிவிட்டது. நாங்கள் உலக அரங்கில் இருந்து பின்வாங்கிவிட்டோம். எங்களிடம் கருத்துக்களும் பார்வைகளும் இருந்தும் அவை இன்று வெளிப்படவில்லை.” என தெரிவித்துள்ளார்.