உலகம்

வங்கதேச பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்பு!

விழாவில் ஓம் பிர்லா பங்கேற்பு

மோகன் கணபதி

டாக்கா: வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவரான தாரிக் ரஹ்மான், அந்நாட்டின் பிரதமராக இன்று பதவியேற்றார். அதிபர் முகம்மது ஷகாபுதின் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

வங்கதேச நாடாளுமன்றத்துக்கு கடந்த 12-ம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 297 இடங்களில் 209 இடங்களை வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) கைப்பற்றியது. மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிக இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, அதன் தலைவரான தாரிக் ரஹ்மான் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இன்று அவர் பிரதமராக பதவியேற்றார்.

          

வங்கதேச நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் வங்கதேச அதிபர் முகம்மது ஷகாபுதின் அவருக்குப் பதிவிப் பிரமாணம் செய்து வைத்தார். தாரிக் ரஹ்மானுடன் 25 அமைச்சர்களும், 24 இணை அமைச்சர்களும் பதவியேற்றனர். அமைச்சர்களாக பதவியேற்ற 25 பேரில், தாரிக் ரஹ்மான் உட்பட 17 பேர் புதிதாக பதவியேற்றனர்.

பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்காக டாக்கா சென்ற இந்திய குழுவினரை, வங்கதேச வெளியுறவுச் செயலாளர் நஸ்ரூல் இஸ்லாம் வரவேற்றார். இது ஒரு முக்கியமான தருணம் என குறிப்பிட்ட ஓம் பிர்லா, இரு நாட்டு மக்களுடனான உறவுகளை வலுப்படுத்தும் என்றார். மேலும், இந்தியாவும் வங்கதேசமும் ஜனநாயக விழுமியங்களை பகிர்ந்து கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தாரிக் ரஹ்மான் வெற்றி பெற்றதை அடுத்து அவரை முதலில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர். அப்போது, பதவியேற்புக்குப் பிறகு சவுகரியமான ஒரு தருணத்தில் இந்தியாவுக்கு வருமாறு தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதன் தொடர்ச்சியாக, தாரிக் ரஹ்மானின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு வங்கதேச அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும், இந்தியாவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதால் அவருக்குப் பதிலாக ஓம் பிர்லாவை அனுப்பிவைத்தார்.

பதவியேற்பு விழாவை முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. காவல்துறை, அதிபருக்கான காவல் படை, எஸ்எஸ்எஃப் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

SCROLL FOR NEXT