தீ விபத்து நிகழ்ந்த பார்

 
உலகம்

சுவிட்சர்லாந்து பாரில் பயங்கர தீ விபத்து: 10+ பேர் உயிரிழப்பு; 100+ காயம்

மோகன் கணபதி

ஜெனிவா: சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பார் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

சுவிட்சர்லாந்து தலைநகரான பெர்னில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பனிச்சறுக்கு நகரமான கிரான்ஸ்-மொன்டானாவில் உள்ள கான்ஸ்டெல்லேஷன் என்ற பாரில் நள்ளிரவு 1.30 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு 100-க்கும் மேற்பட்டோர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்துள்ளனர்.

பட்டாசு வெடி சத்தத்துக்கு மத்தியில் கொண்டாட்டம் களைகட்டிய நிலையில் இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசுகள் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விபத்து நிகழ்ந்த சிறிய இடத்தில் ஏராளமானோர் குவிந்திருந்ததால் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தகவலின்படி, 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்து நிகழ்ந்தவுடன் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஏராளமான ஆம்புலன்ஸ்களும் ஹெலிகாப்டர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தன. பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் தீக்காயங்கள் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததால் நிலைமையை சமாளிக்க மருத்துவ பணியாளர்கள் போராடியதாகக் கூறப்படுகிறது.

விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை செய்தித் தொடர்பாளர் கேட்டன் லதியான், ‘‘லி கான்ஸ்டெல்லேஷன் என்ற பாரில் நள்ளிரவு 1.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது கட்டிடத்துக்குள் 100க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். பலர் காயமடைந்திருப்பதையும் பலர் உயிரிழந்திருப்பதையும் நாங்கள் பார்த்தோம். விசாரணையை தற்போதுதான் தொடங்கி உள்ளோம். இது, சர்வதேச அளவில் புகழ்பெற்ற பனிச்சறுக்கு சுற்றுலாத்தலம்’’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT