உலகம்

“உச்ச தலைவர் மொஜ்தபா காமேனிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” - ஈரான் வெளியுறவு அமைச்சர்

வெற்றி மயிலோன்

தெஹ்ரான்: அமெரிக்க அதிபர் மற்றும் அதிகாரிகள், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவித்த நிலையில், அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரின் தொடக்கத்தில் நடந்த தாக்குதலில் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்ட பிறகு அவரின் மகன் மொஜ்தபா காமேனி அதிகாரத்திற்கு வந்தார். இந்த சூழலில், “வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலில் மொஜ்தபா காமேனி காயமடைந்துள்ளார்; அநேகமாக அவரது முகம் சிதைந்திருக்கலாம்" என்று அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் கூறினார்.

          

இன்று தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “ஈரானில் சமீபத்தில் உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற மொஜ்தபா காமேனி உயிருடன் இருக்கிறாரா என்பதே எனக்குத் தெரியவில்லை. இதுவரை, அவர் பொதுவெளியில் தோன்றவில்லை. அவரின் மரணம் குறித்த செய்திகள் தற்போது வெறும் வதந்தி மட்டுமே. அவர் உயிருடன் இல்லை என்று எனக்குத் தகவல்கள் வருகின்றன. ஒருவேளை அவர் உயிருடன் இருந்தால், அவர் தனது நாட்டிற்காக மிகவும் புத்திசாலித்தனமான ஒன்றைச் செய்ய வேண்டும்; அதுதான் சரணடைவது” என்று கூறினார்.

இந்த சூழலில், 'எம்எஸ் நவ்' ஊடகத்தைச் சேர்ந்த அய்மன் மொஹியேல்டியிடம் பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “புதிய உச்ச தலைவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் நேற்று எங்களுக்கு தனது செய்தியை அனுப்பினார்; அவர் தனது கடமைகளைத் தொடர்ந்து ஆற்றுவார்" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT