கொழும்பு: இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 47 பேர் உயிரிழந்தனர். காணாமல்போன 21 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இலங்கை தீவின் மேற்பரப்பில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நவ.17-ம் தேதி முதல் கடந்த 11 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்வதால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர் மழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்கள் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன. மழை, வெள்ளத்தால் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. நிலச்சரிவு மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
தேயிலைத் தோட்டங்கள் அதிகம் உள்ள பதுல்லா மாவட்டத்தில் உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. அங்கு இரவில் வீடுகள் மீது மண் சரிந்து விழுந்ததில் 16 பேர் உயிருடன் பூமிக்குள் புதைந்தனர். 21-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை மீட்புப் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நிலச்சரிவால் 400 வீடுகள் சேதமடைந்துள்ளன. 1,100 குடும்பங்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.
6 லட்சம் ஏக்கரில் பயிர்கள் நாசம்: நாட்டில் 6 லட்சம் ஏக்கர் பரப்பிலான நெல் வயல்கள், காய்கறித் தோட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதனால், உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படு கிறது. கண்டி மாவட்டத்தில் 18 செ.மீ. மழை பெய்ததால், அங்கு அவசர கால பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பகுதியின் சில இடங்களில் 25 செ.மீ. அளவுக்கு மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஆறுகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தற்போது வடகிழக்கு பருவமழைக்காலம் தொடங்கியுள்ளது. எனினும், கிழக்கு பகுதியில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவே கனமழை கொட்டி வருவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் விவாதங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளில் கவனம் செலுத்துமாறும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்குமாறும் எம்.பி.க்களுக்கு அதிபர் அனுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகள் மூடல்: மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இறுதி ஆண்டு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
கனமழை, வெள்ளத்தால் மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் பல தேசியப் பூங்காக்களை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது. ரயில், பேருந்து போக்குவரத்து சேவை முற்றிலுமாக முடங்கியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 2024 ஜூனில் கனமழைக்கு 26 பேர் உயிரிழந்தனர். கடந்த டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.