ஆராவ்: சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் உள்ள ஷாச்சென் குதிரைப் பந்தய மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் உயிழந்தார்; 5 பேர் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் காவல்துறை தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் உள்ள ஷாசென் குதிரைப் பந்தய மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால், மீட்புக்குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த வருடாந்திர விருந்து நிகழ்ச்சியில் சுமார் 3,500 பேர் கலந்துகொண்டனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆராவ் ஷாசென் பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு ஆராவ் மாநிலக் காவல்துறை கேட்டுக்கொண்டது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததையும், 5 பேர் காயமடைந்ததையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
காவல்துறை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆராவ்: ஷாசென் பகுதியில் நேற்றிரவு நடைபெற்ற ‘ஆராவ் ரேவ்’ நிகழ்ச்சியில், இன்று அதிகாலை 2.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையின் தீவிர நடவடிக்கை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அப்பகுதியை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் யார், தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல்களை காவல்துறை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.