ஷேக் ஹசீனா
புதுடெல்லி: வங்கதேசத்தில் 2024-ம் ஆண்டு மாணவர்கள் போராட்டத்தால், பிரதமர் பதவியை இழந்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். தற்போது அங்கு தேர்தல் நடைபெற்று பிஎன்பி கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. பிரதமராக தாரிக் ரகுமான் உள்ளார். மாணவர்கள் போராட்டம் அடக்குமுறை தொடர்பான வழக்கில், வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்தது. இதில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை ஷேக் ஹசீனா மறுத்தார்.
இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ஷேக் ஹசீனா அளித்த பேட்டியில் கூறியதாவது: என்னை வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்பும்படி, வங்கதேச அதிகாரிகள் இந்தியாவுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகின்றனர். நான் நானாகவே வங்க தேசம் செல்வேன். எனது கட்சி தலைவர்களும், தொண்டர்களும், மிகுந்த அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர். நானும், அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவர்களும் டிசம்பர் மாதத்தில் வங்கதேசம் திரும்பி நீதிமன்றத்தில் சரணடைய திட்டமிட்டுள்ளோம்.
எனக்கு நீதியின் மீது நம்பிக்கை உள்ளது. என் மீதான வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்பது வழக்கு விசாரணையில் மக்களுக்கு தெரியவரும். நாங்கள் சரணடையும் போது கைது செய்யப்படலாம். சிறை தண்டனையை பற்றி நான் கவலைப்படவில்லை. அதை நான் எனது அரசியல் வாழ்க்கையில் பலமுறை அனுபவித்துள்ளேன். இந்த விஷயத்தில் எது நல்லது, எது தவறு என முடிவு செய்யும் உரிமை வங்கதேச மக்களுக்கு உள்ளது. இவ்வாறு ஷேக் ஹசீனா கூறினார்.