பாரிஸ்: இந்தியக் கடல்சார் பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு பிரான்ஸின் ஏவியான் நகரில் கடந்த 15-ம் தேதி தொடங்கியது.
இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, கனடா பிரதமர் மார்க் கார்னி, ஜப்பான் பிரதமர் சனேடகைச்சி, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லியன், ஐரோப்பியக் கவுன்சில் தலைவர் அந்தோணியோ கோஸ்டா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதனிடையே, பிரதமர் மோடி கடந்த 13-ம் தேதி டெல்லியில் இருந்து பிரான்ஸ் சென்றநிலையில் அங்கிருந்து ஸ்லோவேக்கியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அந்நாட்டுத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர் ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் மீண்டும் பிரான்ஸுக்கு திரும்பினார்.
பிரான்ஸின் ஏவியான் நகரில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற ஜி7 அமர்வுகளில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். ஜி7 மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் ட்ரம்பை, பிரதமர் மோடி நேற்று சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் கைகுலுக்கி கொண்டனர். இருவரும் அருகருகே அமர்ந்து 5 நிமிடங்கள் பேசினர். கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரியில் அமெரிக்காவுக்கு சென்ற மோடி, அதிபர் ட்ரம்பை சந்தித்துப் பேசினார்.
அதன் பிறகு அமெரிக்க அரசின் கூடுதல் வரி விதிப்பால் இரு நாடுகள் இடையிலான உறவில் லேசான விரிசல் ஏற்பட்டது. இந்தச் சூழலில் சுமார் 16 மாதங்களுக்குப் பிறகு அதிபர் ட்ரம்பை அவர் நேற்றுமுன்தினம் மீண்டும் சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் பெற்றது.
மாநாடு இறுதி நாள்
இந்நிலையில் மாநாட்டின் இறுதி நாளான நேற்று, பிரிட்டிஷ், கனடா, இத்தாலி பிரதமர்கள், ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் ஜயாத் அல் நயான் உள்ளிட்டோரை பிரதமர் மோடி தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்புடனும் பிரதமர் மோடி தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். காலையில் தொடங்கிய மாநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் மதிய உணவு இடைவேளையின்போது அதிபர் ட்ரம்ப்பை பிரதமர் மோடி சந்தித்தார்.
அப்போது உலக அளவில் உள்ள கடல் சார் பணியாளர்களில் 10 சதவீதம் பேர் இந்தியர்கள் என்றும், இந்தியக் கடல்சார் பணியாளர்கள் பாதுகாப்பாக பணியாற்ற அமெரிக்கா உதவவேண்டும் என்று பிரதமர் மோடி அப்போது வலியுறுத்தினார். கடல்சார் பணியாளர் உயிருக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவது தொடர்பாகவும், அவர்கள் அச்சுறுத்தல் இல்லாமல் பணியாற்றுவதன் அவசியத்தையும் பிரதமர் மோடி அதிபர் ட்ரம்பிடம் எடுத்துரைத்தார்.
அமெரிக்கா-ஈரான் இடையே போர் நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் ஓமன் கடல் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவம் கடந்த வாரம் இருநாட்டு உறவில் புதிய சிக்கலை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்தே இந்த விவகாரத்தை பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப்பிடம் எடுத்துரைத்தார் என்று தெரியவந்துள்ளது.
இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு, பொருளாதார வளர்ச்சி, விநியோகச் சங்கிலிகள், செயற்கை நுண்ணறிவு (ஏஐ), முதலீட்டுப் பங்களிப்புகள், வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, எரிசக்திப் பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள், விசா தொடர்பான விவகாரங்கள், மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் புகழாரம்
பிரதமர் மோடி குறித்து அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “இந்தியப் பிரதமர் மோடி மிகவும் அமைதியானவர், நிதானமானவர். எதையும் சாதிக்கக்கூடிய திறமை படைத்தவர். நான் அப்படி இல்லை. அவர் எப்படி இருக்கிறார் பாருங்கள்’’ என்று பாராட்டினார்.
வர்த்தகம் மற்றும் வரிவிதிப்பு விவகாரங்கள் குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலிலும், பிரதமர் மோடிக்கு, அதிபர் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், அவர்களின் அதிகாரப்பூர்வ சந்திப்பு முக்கித்துவம் பெற்றுள்ளது.