உலகம்

ரஷ்ய பிளேக் தடுப்பு ஆய்வக ஆராய்ச்சியாளர் உயிரிழப்பு: தீவிர கண்காணிப்பில் 200+ பேர்

வேட்டையன்

மாஸ்கோ: ரஷ்யாவில் பிளேக் நோய் தடுப்பு ஆய்வகத்தில் பணியாற்றிய 28 வயது பெண் ஆராய்ச்சியாளர் நிமோனியா பாதிப்பால் உயிரிழந்தார். இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருடன் நேரடி தொடர்பில் இருந்த சுமார் 200 பேரை மருத்துவ கண்காணிப்பில் ரஷ்யா வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தச் சூழலில் ஆராய்ச்சியாளர் உயிரிழப்புக்கும், அவரது தொழில்முறை பணிக்கும் தொடர்புடைய நுண்ணியிரிகள் அவரின் உடலில் காணப்படவில்லை என்று ரஷ்யாவின் பொது சுகாதார கண்காணிப்பு அமைப்பான Rospotrebnadzor தெரிவித்துள்ளது. அவரது நிமோனியா பாதிப்புக்கான காரணம் தெரியவில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் இர்குட்ஸ்க் பகுதிக்கு அருகில் உள்ள ஷெலெகோவ் என்ற இடத்தில் உயிரிழந்த 28 வயது ஆராய்ச்சியாளர் பணியாற்றிய பிளேக் நோய்த் தடுப்பு ஆய்வகம் அமைந்துள்ளது. இந்தச் சூழலில் இர்குட்ஸ்க் மாறும் ஷெலெகோவ் பகுதிகளில் சுகாதாரச் சூழல் நிலையாக இருப்பதாக சுகாதார கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

ரஷ்ய அரசு தரப்புக்கள் சூழலை விளக்கி உள்ள நிலையில், அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் பதற்றம் காரணமாக அவரது மரணத்துக்கு பிளேக் நோய் பாதிப்பு காரணமாக இருக்கலாம் என உள்ளூர் மக்கள் அச்சம் கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து பல்வேறு வதந்திகளும் பரவுகின்றன.

இருப்பினும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த ஆய்வாளரின் நெருங்கிய வட்டம் மற்றும் அவர் வசித்த பகுதிகளில் இருந்தவர்கள் தற்போது மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல். உயிரிழந்த ஆய்வாளர் பணியாற்றிய ஆய்வு நிறுவனத்துக்கு அருகில் உள்ள அலுமினிய தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள், சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற கூறப்பட்டுள்ளதாக தகவல்.

மேலும், உயிரிழந்த ஆய்வாளர் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் இருந்த சிலரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அவர்களிடத்தில் ஆய்வக பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து ரஷ்யா விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல். இது மக்களிடையே அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

SCROLL FOR NEXT