இம்ரான் கான், காசிம் கான்
இஸ்லாமாபாத்: ‘‘சிறையில் எனது தந்தை இம்ரான் கான் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு ஆதாரங்களை வெளியிட வேண்டும்’’ என்று அவரது மகன் காசிம் கான் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பல்வேறு வழக்குகள் தொடர்பாக தண்டனை விதிக்கப்பட்டு ராவல்பிண்டி அடியாலா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி இம்ரானின் குடும்பத்தினர் அவரை அவ்வப்போது சந்தித்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக சிறையில் அவரை சந்திக்க நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதற்கிடையில், சிறையில் இம்ரானை ராணுவம் கொன்றுவிட்டதாக தகவல் பரவியது.
இதையடுத்து 2 நாட்களுக்கு முன் சிறைக்கு வெளியில் இம்ரான் கானின் சகோதரிகள் 3 பேர் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீஸார் கடும் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இம்ரானின் மகன் காசிம் கான் நேற்று தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
எனது தந்தை உயிரோடு இருக்கிறார் என்றால், அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும். கடந்த ஒரு மாதமாக அவரை சந்திக்க எங்களை அனுமதிக்காதது ஏன்? மனிதாபிமானமில்லாமல் அவரை தனிமைப்படுத்தி வைத்திருப்பது சரியல்ல. இது சட்டவிரோதமானது. கடந்த 845 நாட்களாக எனது தந்தை சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு மாதமாக அவரை யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை. நீதிமன்ற உத்தரவு இருந்தும், அவரை சந்திக்க அனுமதிக்காதது ஏன்? போனிலும் பேச முடியவில்லை.
எங்களது தந்தையின் பாதுகாப்பு, உடல்நலம் எல்லாவற்றுக்கும் பாகிஸ்தான் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் தலையிட்டு, எனது தந்தையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு காசிம் கான் கூறியுள்ளார்.