ஈரான் போராட்டக் களம்

 
உலகம்

விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி... வீதிகளில் திரண்ட மக்கள் - ஈரானில் நடப்பது என்ன?

உச்ச தலைவர் கமேனிக்கு எதிராக வலுக்கும் போராட்டம்

பாரதி ஆனந்த்

கடந்த 2022-ம் ஆண்டு இலங்கையில் மக்கள் போராட்டம் ஒன்று வெடித்ததை மறந்திருக்க முடியாது. விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் மக்கள் வெகுண்டெழுந்து அதிபர் மாளிகையை சூறையாடி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர்.

மிக எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், அதேபோன்றதொரு நிலவரம் தான் இப்போது ஈரானில் நிலவுகிறது. ஆனால் ஈரானின் அரசியல் களமும், அதற்கு இத்தகைய நெருக்கடி ஏற்பட்ட பின்னணியில் இருக்கும் உள்நாட்டு மற்றும் புறக் காரணிகளும் மிக முக்கியமானவை.

ஈரான் கமேனிக்குப் பின்... - மேற்கு ஆசிய நாடான ஈரானின் அரசியல் வரலாற்றை அயோதுல்லா அலி கமேனிக்கு முன் கமேனிக்கு பின் என்று பிரித்துக் கொள்ளலாம். கமேனி, 1939-ம் ஆண்டு பிறந்தவர். இவரது தந்தை ஜாவேத் கமேனி ஒரு மதகுரு.

1960 முதல் 70 வரை ஈரானில் இருந்த ஆட்சியை திரைமறைவில் இருந்து அமெரிக்கா இயக்கிக் கொண்டிருந்தது எனலாம். ஷா வம்சத்தினரின் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம் அது. ஈரான் மேற்கத்திய கலாச்சாரத் தன்மையில் மூழ்க ஆரம்பித்திருந்தது.

அப்போது அயோதுல்லா கமேனி, ஈரான் மேற்கத்திய கலாச்சார மயமாக்கலுக்கு உள்ளாவதற்கு எதிராக போராடும் குழுக்களுடன் இணைந்து போராடி வந்தார். ருஹொல்லா கொமேனியின் தீவிர ஆதரவாளராக இருந்தார். புரட்சியில் ஆட்சியாளர்களை ஸ்தம்பிக்க வைத்ததால், ஷா ஆட்சியின் ரகசிய போலீஸாரால் கமேனி கைதும் செய்யப்பட்டார்.

தொடர்ந்து ஷா குடும்பத்தினர், ஈரானில் அமெரிக்க, பிரிட்டன் நாடுகளின் தலையீட்டால் பொருளாதார ஏற்றம் வரும் என காத்திருந்தனர். ஆனால், ஈரான் எண்ணெய் வளம் பயன்படுத்திக் கொள்ளப்பட்டதே தவிர, அங்கு எந்த செழிப்பும் ஏற்படவில்லை. அப்போதுதான் ஈரான் மதகுருக்கள், அறிவுஜீவிகள், மாணவர்கள் இணைந்து ஒரு புரட்சியை நடத்தினர். அதன் விளைவாக 1979-ல் ஷா ஆட்சி அதிகாரம் தூக்கி வீசப்பட்டது.

ஈரான் ஓர் இஸ்லாமிய குடியரசு ஆனது. இஸ்லாமிய புரட்சிகர கவுன்சிலின் உறுப்பினரானார் கமேனி. முகமது அலி ரஜாயி ஈரான் அதிபரானார். ஆனால், ஒரு குண்டு வீச்சு நிகழ்வில் முகமது அலி கொல்லப்படவே, 1982-ல் ஈரான் அதிபரானார் கமேனி. 1989-ல் ஈரானின் உச்ச தலைவரானார். அன்று தொட்டு இன்று வரை அவர் தான் ஈரானின் உச்ச தலைவராக இருக்கிறார்.

ஒரு சிறந்த கவிஞர், கவிதை ரசிகர். அவருடைய அவையில் எப்போதும் அரசைப் புகழ்ந்துபாடும் கவிராயர்கள் சூழ்ந்திருப்பர். இன்னும் அவர் அப்படித்தான் இருக்கிறார், இருந்தாலும் அவரே அனைத்து அதிகாரங்களையும் வைத்திருக்கும் உச்ச தலைவர்.

புரட்சிக்குப் பின்னரும் கூட ஈரான் அமைதியாக இல்லை. அண்டை நாடான ஈராக் உடன் 1980 முதல் 88 வரை போர் செய்தது. அதை புனிதப் போர் என்று அழைத்தது.

ஈரானை எத்தகைய போர் சூழல் வந்தாலும் தாக்குப் பிடிக்கும் அளவுக்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பது கமேனியின் நிலையான குறிக்கோள். அதனைச் சுற்றியே ஈரானின் எல்லா செயல்பாடுகளும் இன்றளவும் கட்டமைக்கப்படுகின்றன.

இஸ்லாமிய சட்டப்படி நடக்கும் ஆட்சியில் கமேனிக்கு நாட்டின் அரசு, நீதித் துறை, ஊடகம் என அனைத்தின் மீதும் வானளாவிய அதிகாரம் உண்டு. இந்த ஏகபோக அதிகாரம்தான் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் என்கின்றனர் தற்போது களத்தில் போராடும் மக்களும், இளைஞர்களும்.

3 ஆண்டுகளுக்குப் பின்னர்... - ஈரான் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் அரசுக்கு எதிரான மிகக் கடுமையான போராட்டத்தை எதிர்கொண்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு ஹிஜாப் அணியாததற்காக மாஷா அமினி என்ற இளம்பெண் போலீஸ் காவலில் உயிரிழந்ததற்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் நடந்தது.

இப்போது நாட்டில் நிலவும் பணவீக்கம், விலைவாசி உயர்வு, நாணய மதிப்பு சரிவு, வேலைவாய்ப்பின்மை ஆகியனவற்றுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. ஆனால், பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தோடு இப்போது ஈரானின் உச்ச தலைவர் அயோதுல்லா அலி கமேனிக்கு எதிராகவும் அதிருப்தி அலைகள் வலுத்துள்ளது.

ஈரானின் 21 மாகாணங்கள் போராட்டத்தால் பற்றி எரிகின்றன. நாடெங்கும் “Death to Khamenei", “Shame on Khamenei” போன்ற முழக்கங்கள் வலுத்துள்ளன. போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.

டிச.28 தொடங்கிய போராட்டம்: 2025 டிச.28-ம் தேதி பங்குச் சந்தை சரிவை ஒட்டி ஒரு சிறிய போராட்டம் நடந்தது. 29-ம் தேதி அந்தப் போராட்டத்துக்கு ஈரானிய கனரக வாகன ஓட்டுநர்கள் யூனியன் ஆதரவு அளித்தது. டிச.30 போராட்டம் மெள்ள மெள்ள 9 மாகாணங்களுக்குப் பரவியது. பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக களத்தில் இறங்கினர்.

டிச.31 ஈரான் அரசு பெருகும் பதற்றத்தைக் கட்டுப்படுத்த 21 மாகாணங்களிலும் பொது விடுமுறை அறிவித்தது. ஜனவரி 1, 2026-ல் பாதுகாப்புப் படையினருடனான போராட்டக்காரர்களின் மோதல் வலுத்தது. தொடர்ந்து 7 பேர் உயிரிழந்தனர். இதில் ஒருவர் பாசிஜ் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்.

அண்மை நிலவரப்படி போராட்டம் கிராமப்புறங்களிலும் பரவியுள்ளது. போராட்டக் களத்தில் பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை, தண்ணீர், எரிபொருள் நெருக்கடி ஆகியனவற்றுக்கு எதிராக முழக்கங்கள் எழுவதோடு, கமேனிக்கு எதிரான கண்டனம் வலுத்துள்ளது.

அதிபரின் வாக்குறுதி: அதிபர் மசூத் பெசேஸ்கியான், “மக்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்கிறோம். நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். ஈரான் மத்திய வங்கிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார சீர்திருத்தங்களை அலோசித்து வருகிறோம். ஆனால், அரசு ஸ்திரத்தன்மையை ஆட்டும் அளவுக்கு போராட்டங்கள் வலுக்கும்பட்சத்தில் விளைவுகள் கடுமையாக இருக்கும்” என்று எச்சரித்துள்ளார்.

ஈரான் பணவீக்கப் பிரச்சினையில் சிக்கியது ஏன்? - ஈரான் நீண்ட காலமாக இஸ்ரேலுடன் போரில் ஈடுபட்டுள்ளது. காசா மீதான தாக்குதலுக்குப் பின்னர் ஹமாஸ் அழிப்புக்காக இஸ்ரேல் லெபனான், சிரியா என்று பல நாடுகள் மீதான தாக்குதலையும் தீவிரப்படுத்தியது. அந்த வரிசையில் ஈரானை சீண்டியது இஸ்ரேல். இதற்கு ஈரான் மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. 12 நாட்கள் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் நடத்திய தாக்குதல் ஈரான் பொருளாதாரத்தை மிகக் கடுமையாக பதம் பார்த்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க, ஈரானுக்கு அமெரிக்கா நீண்ட காலமாகவே பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இப்போது இது இன்னும் பல மேற்கத்திய நாடுகளும் இணைந்து கொண்டுள்ளன. இவை ஈரான் பொருளாதாரத்தின் மீது கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் குறிப்பாக ஈரானின் நாணயம் ரியால் மீதான தாக்கத்தை கடுமையாக்கியுள்ளது.

கடந்த 2015-ல் அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் நாணயத்தின் மதிப்பு 32,000 ரியாலாக சரிந்தது. அது மென்மேலும் சரிந்து இப்போது 1.4 மில்லியன் என்ற மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ரியால் மதிப்பு சரிவு 40 முதல் 45 சதவீதம் அதிகரித்துள்ளது.

ரியால் மதிப்பு சரிவு, பணவீக்கத்துக்கு வழிவகுத்தது. இதனால் பால், தானியங்கள் போன்ற உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 70% அதிகரித்தது. இதுதான் சாமானிய மக்களை வீதிகளுக்குத் தள்ளியுள்ளது. எற்கெனவே மாஷா அமினிக்கு எதிரான போராட்டத்திலேயே உயிரை துச்சமென நினைத்து போராடிய இளைஞர்கள் இந்த முறை அதைவிட ஆக்ரோஷமாக அரசுக்கு எதிராக உச்சத் தலைவருக்கு எதிராக களமிறங்கியுள்ளனர்.

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி | கோப்புப் படம்

இஸ்லாமிய புரட்சிகர ராணுவப் படைகளுக்கு எதிராக... - இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த, அதிகாரமிக்க ராணுவ மற்றும் பாதுகாப்புப் படையான இஸ்லாமிய புரட்சிகர ராணுவப் படைகளையும் (Islamic Revolutionary Guard Corps - IRGC) எதிர்க்க மக்கள் துணிந்துவிட்டனர். இந்தப் படை ஈரானின் உச்ச தலைவர் கமேனியுடன் நேரடி தொடர்பு கொண்ட படை. இதற்கு முந்தைய போராட்டங்களில் ஐஆர்ஜிசி வந்தால் கப்சிப் என களத்தை காலி செய்யும் மக்கள் இந்த முறை அதைச் செய்யவில்லை. கமேனியை அப்புறப்படுத்த வேண்டும் என்று ஓங்கி ஒலிக்கின்றனர்.

அரசு அலுவலகங்களை சூறையாடுவது, கமேனியின் சிலையை நொறுக்கி வீழ்த்துவது என போராட்டக்காரர்கள் கட்டுக்கு அடங்காமல் சென்று கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், “அமைதி வழியில் போராடும் மக்களுக்கு எதிராக ஈரான் வன்முறையை நிகழ்த்தினால், அமெரிக்கா தலையிடும். நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT