ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரின் ராவலாகோட் பகுதியில் ஜூன் 24 அன்று ஜேஏஏசி நடத்திய போராட்டம்

 
உலகம்

கோரிக்கைகளை நிறைவேற்ற 48 மணி நேர கெடு: பாக். அரசுக்கு ஆக்கிரமிப்பு காஷ்மீர் அமைப்பு எச்சரிக்கை

மோகன் கணபதி

முசாபராபாத்: கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுவித்தல் உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகளை 48 மணி நேரத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு ஜம்மு காஷ்மீர் கூட்டு மக்கள் செயற்குழு கெடு விதித்துள்ளது. இல்லாவிட்டால், வரும் 9-ம் தேதி மிகப்பெரிய இறுதிக்கட்டப் போராட்டம் நடத்தப்படும் என்று அது எச்சரித்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் பகுதியில் அரசியல் கொந்தளிப்பு அதிகரித்து வருகிறது. 38 கோரிக்கைகளை முன்வைத்து, ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த ஜம்மு காஷ்மீர் கூட்டு மக்கள் செயற்குழு (ஜேஏஏசி) என்ற அமைப்பு போராடி வருகிறது. இந்த அமைப்பை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது. எனினும், இந்த அமைப்பின் சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. போராட்டங்களில் ஈடுபட்ட பலர் கொல்லப்பட்ட நிலையில், 600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தங்கள் அமைப்பின் மீதான தடையை நீக்க வேண்டும், தகவல் தொடர்பு சேவைகளை மீண்டும் வழங்க வேண்டும், உணவு, மருந்து ஆகியவற்றை தடையின்றி வழங்க வேண்டும், கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுவிக்க வேண்டும், மேலும், 38 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை ஜம்மு காஷ்மீர் கூட்டு மக்கள் செயற்குழு முன்வைத்துள்ளது. இந்த கோரிக்கைகளை 48 மணி நேரத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் நாளை மறுநாள் மிகப் பெரிய இறுதிக்கட்டப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அது எச்சரித்துள்ளது.

மேலும், ஜூலை 9 அன்று நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும், வெளிநாடுகளில் வசிக்கும் காஷ்மீரிகளுக்கும் அது அழைப்பு விடுத்துள்ளது.

SCROLL FOR NEXT