புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக நேற்று உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டுக்கு சென்றார்.
சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த உஸ்பெகிஸ்தான் கடந்த 1991-ம் ஆண்டு தனி நாடாக உதயமானது. அந்த நாட்டில் இயற்கை எரிவாயு, யுரேனியம், தங்கம் உள்ளிட்ட இயற்கை வளங்கள் நிறைந்துள்ளன.
இந்தியாவில் இருந்து உஸ்பெகிஸ்தானுக்கு மருந்துகள் மற்றும் தொழில் துறைக்கு தேவையான இயந்திரங்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த நாட்டில் இருந்து உரங்கள், பழங்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. கல்வி, தகவல் தொழில்துட்ப துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன.
கடந்த 2015, 2016-ம் ஆண்டுகளில் உஸ்பெகிஸ்தானுக்கு பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணம் மேற்கொண்டார். கடந்த 2022-ம் ஆண்டில் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்றார். சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு உஸ்பெகிஸ்தானுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்றார். தலைநகர் தாஷ்கண்ட் விமான நிலையம் சென்ற அவரை அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் நேரில் சென்று வரவேற்றார்.
இரு தலைவர்களும் இன்று சந்தித்துப் பேசுகின்றனர். அப்போது வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம், எரிசக்தி, கல்வி ஆகிய துறைகளில் இரு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்.
வரும் 31-ம் தேதி கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்குக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார். அங்கு ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கிறார்கள். அவர்களை பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியாக சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் பயணம் குறித்து பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் அழைப்பின்பேரில் தாஷ்கண்ட் செல்கிறேன். இந்தியா, உஸ்பெகிஸ்தான் இடையே நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. இரு நாடுகளும் வளர்ச்சி அடைந்த நாடுகளாக உருவெடுக்க உறுதியேற்று உள்ளன. இதற்காக இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும். எனது உஸ்பெகிஸ்தான் பயணத்தின்போது சாஸ்திரி நினைவகம், மகாத்மா காந்தி மையத்துக்கு செல்கிறேன்.
கிர்கிஸ்தான் அதிபர் சாதிர் ஜபரோவ் அழைப்பின்பேரில் 26-வது எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்கிறேன். பிராந்திய வளர்ச்சி, பாதுகாப்பு, போக்குவரத்து இணைப்பு, தொழில் வாய்ப்புகள் குறித்து எஸ்சிஓ தலைவர்களுடன் கலந்தாலோசிக்க உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.