புதுடெல்லி: நடுவானில் விமானத்தில் கோடாரியால் வெட்டிய பிறகும், துணிச்சலுடன் போராடி பெரும் சதியை முறியடித்த இந்திய பைலட்டுக்கு பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாக உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி நேற்று முன்தினம் காலை 180 பயணிகளுடன் ‘ஃபிளை துபாய்’ விமானம் புறப்பட்டது. இதில் 174 பயணிகளும், பைலட்டுகள் 2 பேர் உட்பட 6 ஊழியர்களும் பயணம் செய்தனர். இந்திய பைலட் ஸ்மித் மச்சார் (39) விமானத்தை இயக்கினார். ஓமன் நாட்டை சேர்ந்த துணை பைலட் உடன் இருந்தார்.
திடீரென பைலட் அறையில் இருந்த கோடரியால் இந்திய பைலட் ஸ்மித் மச்சாரைத் துணை பைலட் தாக்கினார். இதில் நிலைகுலைந்த மச்சார், துணை பைலட்டை தீரத்துடன் எதிர்த்துப் போராடினார்.
கோடாரி தாக்குதலில் வலது கை துண்டிக்கப்படும் நிலையில் இருந்த மச்சார், இடது கையால் சிறப்புப் பொத்தானை அழுத்தி பைலட் அறையைத் திறந்துவிட்டார். அவரது அலறல் கேட்டு 4 இஸ்ரேல் பயணிகள் பைலட் அறைக்குள் புகுந்து துணை பைலட்டை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் சாதாரண பயணிகளாகப் பயணம் செய்த பைலட்டுகள் 2 பேர் விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து சவுதி அரேபியாவின் தபூக் நகரில் விமானத்தைத் தரையிறக்கினர்.
பைலட் ஸ்மித் மச்சார், மகாராஷ்டிர தலைநகர் மும்பையைச் சேர்ந்தவர். இவரது தந்தை உபேந்திர மச்சார், தாய் கீதா மும்பையின் திலக் நகரில் வசிக்கின்றனர். பணி நிமித்தமாக ஸ்மித் மச்சார் தனது மனைவி சோனல், மகள் ஜீவ் (5), மகன் கிரிஷ் (2) ஆகியோருடன் துபாயில் வசிக்கிறார்.
இதையடுத்து மும்பையில் உள்ள ஸ்மித் மச்சாரின் பெற்றோர் மற்றும் துபாயில் வசிக்கும் ஸ்மித்தின் மனைவியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு துணிச்சல் மிக்க மாவீரர். பெரிய ஆபத்தை எதிர்கொண்ட போதும் படுகாயம் அடைந்த போதிலும், மற்றவர்களின் உயிரைப் பாதுகாக்க அளவற்ற துணிச்சலையும் அசைக்க முடியாத உறுதியையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது வீரம் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றவும், பெரும் துயரச் சம்பவத்தைத் தடுக்கவும் உதவியுள்ளது. கேப்டன் மச்சார் குறித்து இந்தியா பெருமை கொள்கிறது. அவர் விரைவில் குணமடைந்து, புத்துணர்ச்சி அடைந்து, நல்ல ஆரோக்கியம் பெறப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
உண்மையான கதாநாயகன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாஷிங்டனில் நேற்று கூறியதாவது: விமானக் கடத்தல் முயற்சி தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசினேன். நடந்த சம்பவங்களைத் தெளிவாக எடுத்துரைத்தார். ‘ஃபிளை துபாய்’ விமானத்தின் துணை பைலட் ஒரு தீவிரவாதி.
அவர் இந்திய பைலட் ஸ்மித் மச்சாரைக் கொடூரமாக தாக்கி உள்ளார். படுகாயம் அடைந்த நிலையிலும் துணை பைலட்டுக்கு எதிராக அவர் தீரமுடன் போராடி உள்ளார். அவர் உண்மையான கதாநாயகன். அவரை மனதாரப் பாராட்டுகிறேன். இந்திய பைலட் ஸ்மித், காக்பிட் கதவை திறந்து விட்டதால் பேரழிவு தடுக்கப்பட்டு உள்ளது. விமானிகள் அறைக்குள் முதலில் நுழைந்த இஸ்ரேலிய பிளம்பர் துணிச்சலுடன் செயல்பட்டு உள்ளார். அவரையும் பாராட்டுகிறேன்.இவ்வாறு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: இந்திய பைலட் ஸ்மித் மச்சார் வீர, தீரத்துடன் போராடி உள்ளார். பைலட்டுகள் அறைக் கதவை அவர் திறந்து விட்டிருக்கிறார். இதன் காரணமாகவே பயணிகள் உள்ளே நுழைந்து விமானத்தை கடத்த முயன்ற துணை பைலட்டை மடக்கி பிடித்துள்ளனர்.
மிகப்பெரிய விமான கடத்தல் முயற்சியை இந்திய பைலட் ஸ்மித் தடுத்து நிறுத்தி உள்ளார். அவர் உண்மையான கதாநாயகன். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கு இயக்கப்படும் விமானங்களில் பணியாற்றும் பைலட்டுகளின் பின்னணி குறித்து விரிவான ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளோம். சந்தேகத்துக்குரிய பைலட்டுகள் இஸ்ரேலுக்குள் விமானத்தை இயக்க தடை விதிக்கப்படும். இவ்வாறு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஸ்பைஸ் ஜெட் சிஇஓ பாராட்டு: விமானி ஸ்மித் மச்சார், இந்தியாவின் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் சுமார் 11 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். கடந்த 2022-ம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ‘ஃபிளை துபாய்’ விமான நிறுவனத்தில் அவர் பணியில் சேர்ந்து உள்ளார். இதுதொடர்பாக ஸ்பைஸ் ஜெட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) அஜய் சிங் கூறியதாவது: எங்கள் நிறுவனத்தின் முன்னாள் பைலட் மிகப்பெரிய தாக்குதலை முறியடித்து உள்ளார்.
விமானப் போக்குவரத்து வரலாற்றில் இது மிகப்பெரிய சாதனை. ஒரு விமான பைலட்டாக அவர் தனது உயிரைப் பணயம் வைத்து அனைத்துப் பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றி உள்ளார். எங்களது ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் 11 ஆண்டுகள் ஸ்மித் மச்சார் மிகச் சிறப்பாக பணியாற்றினார். தற்போது அவரது வீரதீரமிக்க நடவடிக்கையால் ஸ்பைஸ் ஜெட் மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமை கொள்கிறது. இவ்வாறு அஜய் சிங் தெரிவித்தார்.
இவரது துணிச்சலை இந்தியாவில் உள்ள தலைவர்கள், பிரமுகர்களும் வெகுவாகப் பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர்.
குஜராத் அரசு கவுரவம்: விமானி ஸ்மித் மச்சாரின் குடும்பம் குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்டது. அவர் பிறப்பதற்கு முன்பாகவே அவரது குடும்பம் மும்பையில் குடியேறியது. ஸ்மித்தின் தந்தை உபேந்திர மச்சார் ஜவுளி தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். தந்தையின் வழியில் ஜவுளி தொழிலில் கால் பதிக்க ஸ்மித் திட்டமிட்டு இருந்தார். ஆனால், பைலட்டாக வேண்டும் என்ற லட்சிய கனவால் குடும்பத் தொழிலைக் கைவிட்டு விமானம் ஓட்ட பயிற்சி பெற்றார்.
முதலில் சரக்கு விமானங்களை இயக்கிய அவர் கடந்த பல ஆண்டுகளாகப் பயணிகள் விமானத்தை இயக்கி வருகிறார். பைலட் ஸ்மித் மச்சாருக்குக் குஜராத் அரசு சார்பில் நேற்று விசிஷ்ட குஜராத் கரிமா விருது (சிறப்பு குஜராத் பெருமை விருது) அறிவிக்கப்பட்டது. அத்துடன் ரூ.25 லட்சம் ரொக்க பரிசும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.