ஜோகன்னஸ்பர்க்: ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு வந்தடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜி20 அமைப்பில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென்னாப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த ஆண்டு ஜி20 அமைப்புக்கு தென்னாப்பிரிக்கா தலைமை வகிக்கிறது. இதன்படி அந்த நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரில் இன்று ஜி20 உச்சி மாநாடு தொடங்குகிறது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்து விமானத்தில் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு சென்றார். அங்கு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையொட்டி அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆப்பிரிக்காவில் நடைபெறும் முதல் ஜி20 உச்சிமாநாடு இது என்பதால் சிறப்புமிக்க உச்சிமாநாடாக இருக்கும். கடந்த 2023-ம் ஆண்டில் ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகித்தது. அப்போது ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 அமைப்பில் உறுப்பினராக இணைக்கப்பட்டது.
தற்போதைய உச்சி மாநாட்டில் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும். இந்த ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டின் கருப்பொருள் ‘ஒற்றுமை, சமத்துவம் மற்றும் நிலைத்தன்மை' ஆகும். ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை மாநாட்டில் எடுத்துரைப்பேன்.
மாநாட்டில் பங்கேற்கும் பிற நாடுகளின் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளேன். மாநாட்டின் ஒரு பகுதியாக 6-வது இந்தியா -பிரேசில்-தென்னாப்பிரிக்கா (ஐபிஎஸ்ஏ) உச்சி மாநாட்டில் பங்கேற்கிறேன்.
தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரையும் சந்தித்துப் பேசுவேன். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வெள்ளையின மக்களை தென்னாப்பிரிக்க அரசு கொடுமைப்படுத்துவதாக கூறி அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜி20 மாநாட்டை புறக்கணித்துள்ளார்.