பிரான்ஸின் நீஸ் நகரில் ‘பாரதத்தின் புதுமை கண்டுபிடிப்புகள்’ மாநாடு நேற்று தொடங்கியது. இதையொட்டி அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் பார்வையிட்டனர்.
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் அந்த நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். இரு தலைவர்களும் இணைந்து ‘பாரதத்தின் புதுமை கண்டுபிடிப்புகள்’ மாநாட்டை தொடங்கி வைத்தனர்.
பிரான்ஸ், ஸ்லோவேக்கியா நாடுகளில் பிரதமர் மோடி 6 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து கடந்த 13-ம் தேதி அவர் பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், பிரான்ஸின் நீஸ் நகரில் ‘பாரதத்தின் புதுமை கண்டுபிடிப்புகள்’ என்ற 3 நாள் மாநாடு நேற்று தொடங்கியது.
இந்தியாவைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மாநாட்டில் அரங்குகளை அமைத்துள்ளன. உலகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர்.
பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் மாநாட்டை தொடங்கி வைத்தனர். மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா - பிரான்ஸ் இடையே நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. இரு நாடுகளும் ஒன்றிணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக, உலக நாடுகள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு இணைந்து தீர்வு காண்கின்றன. சூரிய சக்தி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆகிய துறைகளில் இணைந்து பணியாற்றி வருகின்றன.
‘இந்தியா - பிரான்ஸ் புதுமை கண்டுபிடிப்பு’ ஆண்டாக இந்த ஆண்டை அறிவித்துள்ளோம். இதன் ஒரு பகுதியாகவே ‘பாரதத்தின் புதுமை கண்டுபிடிப்புகள்’ மாநாடு நடைபெறுகிறது. இதன்மூலம் இந்தியா, ஐரோப்பிய நாடுகளின் தொழில்நுட்ப நிபுணர்கள் இடையே நேரடி தொடர்பு ஏற்படும்.
இந்தியாவில் ஸ்டார்ட்அப் புரட்சி நடந்து வருகிறது. எங்கள் நாட்டில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் 125 நிறுவனங்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளன. அதிக ஸ்டார்ட்அப் நிறுவனங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.
ஏஐ தொழில்நுட்பம் மூலம் இந்திய கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஹைட்ரஜன் எரிசக்தி, மின்சார வாகனங்கள், புதிய பேட்டரி தொழில்நுட்பங்கள் என இந்தியாவில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
ஏஐ, குவான்டம் கம்ப்யூட்டிங், பயோ டெக்னாலஜி, விண்வெளி தொழில்நுட்பம், கனிம வளம் சார்ந்த தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியா முன்னோடியாக உருவெடுத்து வருகிறது. உலக நாடுகளின் தேவைகளை கருத்தில் கொண்டு மனித குலத்துக்கு சேவையாற்ற இந்திய நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்து வருகின்றன. ஏஐ தொழில்நுட்பம் உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இந்தியாவின் லட்சியம்.
புதுமைகளைக் கண்டுபிடிப்பது இந்தியர்களின் மரபணுவோடு கலந்திருக்கிறது. ஒரு காலத்தில் உலகத்தின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் நாடாக இந்தியா இருந்தது. இப்போது உலகத்துக்கு தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்த நேரத்தில் இந்தியாவில் முதலீடு செய்ய உலக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பேசும்போது, ‘‘ஆராய்ச்சி, புதிய தொழில்நுட்பங்களில் இந்தியா முன்னோடியாக உள்ளது. புதுமை கண்டுபிடிப்புகளின் தலைநகராக உருவெடுத்துள்ளது. இந்தியாவோடு இணைந்து பணியாற்ற உலக நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. ஏஐ தொழில்நுட்பம் அனைத்து நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது. இந்த கொள்கைக்கு பிரான்ஸ் முழு ஆதரவு அளிக்கிறது’’ என்று தெரிவித்தார்.
பிரான்ஸிடம் இருந்து புதிதாக 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதில் 24 போர் விமானங்கள் பிரான்ஸில் தயாரிக்கப்பட உள்ளன. மீதமுள்ள 90 போர் விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும். இதில் 60 சதவீத உதிரிபாகங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்கும். ரஃபேல் போர் விமானத்தின் மூலக் குறியீடு (சோர்ஸ் கோடு) இந்தியாவுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.
இதை வழங்குவது குறித்து பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி விரிவாக பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸில் இருந்து பிரதமர் மோடி நேற்று ஸ்லோவேக்கியா தலைநகர் பிராத்திஸ்லாவுக்கு சென்றார். அங்கு அந்நாட்டு பிரதமர் ராபர்ட் ஃபிகோவை இன்று சந்திக்கிறார். ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை மீண்டும் பிரான்ஸ் வருகிறார்.