ஆக்லாந்து: “இந்தியா - நியூஸிலாந்து நாடுகளுக்கு முன்னால் வாய்ப்புகள் நிறைந்த பெருங்கடல் உள்ளது. அதற்கு சாதகமான காற்று வீசுகிறது. எனவே, இந்தியாவில் முதலீடு செய்ய நியூசிலாந்து நாட்டு தொழிலதிபர்கள் முன்வர வேண்டும்” என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து பிரதமர் மோடி நியூஸிலாந்து நாட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனைச் சந்தித்துப் பேசினார்.
அதன்பின் நியூஸிலாந்தின் வணிகத் தலைநகர் ஆக்லாந்து நகரில் அந்நாட்டின் முன்னணி தொழில்துறை மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் (சிஇஓ), தொழிலதிபர்கள், முதலீட்டு நுகர்வோர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
கடந்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் நியூஸிலாந்துக்கு வந்துள்ளது சிறப்பு. இது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். ஆக்லாந்து முதல் வெலிங்டன் வரையிலும், கிறிஸ்ட் சர்ச் முதல் குயின்ஸ்டவுன் வரையிலும் நியூஸிலாந்தின் அனைத்து பகுதிகளிலும் இந்தியர்கள் பரவி உள்ளனர். இந்திய வம்சாவளியினர் இங்கு உயர் பதவியில் உள்ளனர். ஏர் நியூஸிலாந்து சிஇஓ-ஆக நிகில் ரவி சங்கர் ஆனதும், ஆனந்த் சத்யானந்த் கவர்னர் ஜெனரல் ஆனதும் இந்த நியூஸிலாந்தில்தான். ரச்சின் ரவீந்திரா, இஷ் சோதி, அஜாஸ் படேல் ஆகியோர் நியூஸிலாந்து கிரிக்கெட் அணியில் விளையாடி வருகின்றனர். நியூஸிலாந்தில், அதன் தெருக்களுக்கு பெயர் வைப்பதில் கூட இந்திய நகரங்களுக்கு பெருமை கிடைக்கிறது.
பாம்பே ஹில்ஸ், கோரமண்டல், கல்கத்தா ஸ்ட்ரீட், டெல்லி கிரசென்ட், அமிர்தசரஸ் ஸ்டிரீட் எனப் பெயரிடப்பட்ட இடங்களும் நியூஸிலாந்தில் உள்ளன. இதுபோல எத்தனையோ பெயர்கள் நியூஸிலாந்தில் இடம்பெற்றுள்ளன. இந்தியா, நியூஸிலாந்து இடையே விளையாட்டு துறையில் உறவு ஏற்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்த ஆண்டில், இந்திய ஹாக்கி அணி, நியூஸிலாந்து வந்து விளையாடி உள்ளது. அப்போது மேஜர் தயான் சந்தின் திறமை பேசப்பட்டது.
நியூஸிலாந்திடம் இருந்து ரக்பி கற்றுக் கொள்ள இந்தியா விரும்புகிறது. சமீபத்தில் இந்திய ரக்பி மற்றும் நியூஸிலாந்தின் ரக்பி அணியும் இணைந்து ஒடிசாவில் இணைந்து பயற்சி மேற்கொண்டது சிறந்த தொடக்கம். விளையாட்டு துறையில் இரு நாடுகளும் இணைந்து பெரிய சாதனை படைக்க முடியும் என்று நம்புகிறேன்.
இந்தியாவின் சந்திரயான் விண்கலம் நிலவின் தென் பகுதியில் தரையிறங்கிய போது, நியூஸிலாந்து மக்கள் கொண்டாடினர். இந்த வெற்றியில் நியூஸிலாந்தின் தொழில்நுட்பம் பங்களித்தது. இந்த ஒத்துழைப்பை வரும் ஆண்டுகளில் இன்னும் எடுத்து செல்ல விரும்புகிறோம்.
இன்று உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது. அதிகளவு தடுப்பூசி உற்பத்தி, மொபைல் போன் உற்பத்தி, அதிகளவு கோதுமை உற்பத்தி, பால் உற்பத்தி, ஆட்டோமொபைல், போன்ற பல துறைகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
இன்றைய இந்தியா உலகுக்குப் புதிய வளர்ச்சி மாதிரிகளையும் வழங்கி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள பல நாடுகள் இன்று இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்புத் துறையில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தியா - நியூஸிலாந்து நாடுகளுக்கு முன்னால் வாய்ப்புகள் நிறைந்த பெருங்கடல் உள்ளது. அதற்கு சாதகமான காற்று வீசுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி - நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் முன்னிலையில் இரு நாடுகள் இடையே பாதுகாப்பு, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம், விளையாட்டு, பேரிடர் மேலாண்மை, சுற்றுலா ஆகிய 5 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.