ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நேற்று நடை பெற்ற கூட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பனீஸ்.படம்: பிடிஐ
மெல்போர்ன்: அதிகம் வளருவோம், அதிகம் சாதிப்போம் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் மிக விரைவாக வளர்ந்த வல்லரசு நாடாக இந்தியா மாறுவதற்கு உழைத்து வருகிறோம் என இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தோனேசியப் பயணத்தை முடித்துக்கொண்டு அவர் 8-ம் தேதி ஆஸ்திரேலியா வந்தடைந்தார். மெல்போர்னில் அந்நாட்டுப் பிரதமர் அந்தோனி அல்பனீஸ், கவர்னர் ஜெனரல் சாம் மோஸ்டின் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார்.
மெல்போர்ன் நகரில் இந்திய வம்சாவளியினர் சார்பில் ‘மெல்போர்ன் மீட்ஸ் மோடி’ என்ற பிரம்மாண்ட வரவேற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பனீஸ் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: அதிகம் வளருவோம், அதிகம் சாதிப்போம் என்ற தாரக மந்திரத்துடன், 21-ம் நூற்றாண்டில் மிக விரைவாக வளர்ந்த வல்லரசு நாடாக இந்தியா மாறுவதற்கான இலக்கை நோக்கி உழைத்து வருகிறோம். இந்தியாவின் இந்த மாபெரும் கனவுகளுக்கும், உயர்ந்த லட்சியங்களுக்கும் நீங்களே அஸ்திவாரம்.
இந்தியர்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ, அங்கெல்லாம் பாலில் சர்க்கரையைப் போன்று மாறுகிறார்கள். பாலுக்கு சுவை சேர்க்கும் சர்க்கரையைப் போல இந்திய வம்சாவளியினர் இருக்கின்றனர். நாம் எங்கு சென்றாலும் அன்பு, நல்லெண்ணத்தைப் பரப்புகிறோம். உங்கள் வீட்டில் இருக்கும் பால் ஆஸ்திரேலியாவுடையதாக இருக்கலாம். ஆனால், தேநீர் இந்தியாவுடையது.
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது எதிரிகளின் தீவிரவாத முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன. தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுத்த இந்த நடவடிக்கைகள் உலகுக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்பியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்புத் தளவாடங்களின் திறன் மற்றும் நம்பகத்தன்மையை உலகம் இப்போது நேரில் கண்டு வருகிறது.
ஆபரேஷன் சிந்தூரின்போது, தீவிரவாதிகளின் மறைவிடங்கள் துல்லியமாக தாக்கப்பட்டன. இது உலகம் முழுவதும் இருக்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமிதத்தை ஏற்படுத்தியிருக்கும். இந்தியாவின் பாதுகாப்புத் திறன் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் இப்போது உலகம் முழுவதும் கவனம் பெற்று வருகின்றன.இவ்வாறு பிரதமர் பேசினார்.
இந்திய - ஆஸ்திரேலிய இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், ‘‘இந்திய - ஆஸ்திரேலிய நட்புறவு, ஒன்றும் ஒன்றும் இரண்டுக்கு சமம்’’ என்று குறிப்பிட்டார். அதை கேட்ட பிரதமர் மோடி, ‘‘ஒருவருக்கு ஆதரவாக அருகில் மற்றொருவர் நின்றால், அவர்கள் 2 பேராக மாட்டார்கள். அவர்கள் பதினொன்றாக மாறுவார்கள்’’ என்று இந்தியில் பிரபலமான மரபுத் தொடரைக் குறிப்பிட்டுப் பேசினார். அப்போது இருதரப்பிலும் சிரிப்பலை எழுந்தது.
பிரம்மாண்ட முதலீடு: பிரதமரின் இந்த பயணத்தில், புதிய ஒப்பந்தங்கள் மூலம் இரு நாடுகள் இடையே வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆஸ்திரேலிய - இந்திய முதன்மைச் செயல் அதிகாரிகள் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்தியாவின் விமானப் போக்குவரத்து, நிதிச் சேவைகள், அரிய கனிமங்கள், நவீன தொழில்நுட்பம் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் ஆகிய துறைகளில் உள்ள ஈடு இணையற்ற முதலீட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். இதன் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதி நிறுவனமான ‘ஆஸ்திரேலியன் சூப்பர்' இந்தியாவில் 500 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது இந்தியாவின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மீது சர்வதேச சமூகம் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது என்று பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய கவர்னர் ஜெனரல் சாம் மோஸ்டின் உடனான சந்திப்பின்போது, இரு நாடுகளின் ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் மக்கள் இடையிலான உறவுகள் குறித்து பிரதமர் மோடி விரிவாக ஆலோசித்தார். முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் விக்டோரியா மாகாண கவர்னர் மார்கரெட் கார்ட்னர் ஆகியோரையும் தனித்தனியே சந்தித்து கல்வி,ஆராய்ச்சி மற்றும் முதலீடுகள் குறித்து பிரதமர் மோடி கலந்தாலோசித்தார்.இந்தியாவில் 2030-ம் ஆண்டு நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிகள் மற்றும் 2032 ஆஸ்திரேலிய ஒலிம்பிக் போட்டிகளில் இரு நாடுகளும் விளையாட்டுத் துறையில் இணைந்து செயல்பட ஒப்புக்கொள்ளப்பட்டது.