உலகம்

“போட்டி அல்ல, ஒத்துழைப்பே தேவை...” - ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

மோகன் கணபதி

மணிலா: இந்தியா மற்றும் ஆசியான் நாடுகள் இணைந்து உலக மக்கள் தொகையில் கால் பங்கைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இவர்களின் எதிர்காலம் போட்டியின் மூலமாக அல்லாமல் ஒத்துழைப்பின் மூலம் வடிவமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற 23-வது ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார். அப்போது அவர், “இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மை வளர்ந்து வருகிறது. இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை, செழிப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்த இரு தரப்பும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டில் இது எனது 13வது பங்கேற்பு. இந்தியாவின் கிழக்கை நோக்கி செயல்படு கொள்கை, கடந்த சில ஆண்டுகளில் இந்தியா - ஆசியான் உறவுகளுக்குப் புதிய உத்வேகத்தையும் ஆழத்தையும் அளித்துள்ளது.

பகிரப்பட்ட கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இந்த உறவு, தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு, விண்வெளி போன்ற புதிய துறைகளிலும் விரிவடைந்து வருகிறது.

2014-ம் ஆண்டு முதல் மக்களுக்கு இடையிலான பிணைப்பை வலுப்படுத்த இந்தியா - ஆசியான் நாடுகள் 100-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளன. மேலும், 250-க்கும் மேற்பட்ட விரைவான தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. திறன் மேம்பாட்டுக்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவுக்கும் 9 ஆசியான் நாடுகளுக்கும் இடையே நேரடி விமானச் சேவைகள் இருப்பதும், சுற்றுலாத் துறை வளர்ந்து வருவதும் இரு தரப்பினருக்கும் இடையிலான நெருக்கமான உறவை வெளிப்படுத்துகின்றன.

தற்போதைய உலகச் சூழலில் இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருளான நமது எதிர்காலத்தை ஒன்றிணைந்து வழிநடத்துதல் என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியா மற்றும் ஆசியான் நாடுகள் இணைந்து உலகின் மக்கள் தொகையில் சுமார் கால் பங்கை கொண்டுள்ளன. இந்த மக்களின் எதிர்காலம், போட்டியின் மூலமாக அல்லாமல், ஒத்துழைப்பின் மூலமாக வடிவமைக்கப்பட வேண்டும்.

இந்த பிராந்தியத்தை அமைதி மற்றும் நிலைத்தன்மையின் அடையாளமாக மாற்றுவதற்கான திறன்களும், உறுதியும் இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளிடம் உள்ளன. இந்த ஆண்டில் ஆசியான் நாடு ஒன்றுக்கு நான் மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஆசியான் அமைப்புக்கு அளிக்கப்படும் சிறப்பான முக்கியத்துவத்தை இது உணர்த்துகிறது.

இந்தியாவின் வளர்ச்சியும் ஆசியான் அமைப்பின் செழிப்பும் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகப் பிணைந்துள்ளன. கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவும் ஆசியானும் தங்களது கூட்டாண்மைக்கு புத்துயிர் அளித்துள்ளன. இப்பிராந்தியத்தின் எதிர்காலத்துக்கு ஒரு புதிய பாதையை வகுக்க வேண்டியது அவசியம்” என தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT