கொழும்பு: தீவு தேசமான இலங்கையில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருளின் விலை சுமார் 25 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. தற்போது அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.398-க்கு விற்பனை ஆகிறது.
கடந்த வாரம்தான் இலங்கையில் பெட்ரோல், டீசல் விலையை சுமார் 8 சதவீதம் உயர்த்தி இருந்தது இலங்கை அரசு. அதோடு தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் விநியோகத்தின் சில்லறை விற்பனையில் சில கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு அமல் செய்தது. இந்த சூழலில் மீண்டும் அங்கு எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முறை எரிபொருள் மீதான விலையேற்றம் 25 முதல் 30 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது.
மேற்காசியாவில் அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எரிபொருள் கொண்டு வரும் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து முடங்கியது. இதனால் கச்சா எண்ணெய், எரிவாயு உள்ளிட்டவற்றின் விநியோகம் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போர் காரணமாக இலங்கையில் இரண்டாவது முறையாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. இதை இலங்கை அரசின் நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உறுதி செய்துள்ளது.
மேற்காசிய போர் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் மீதான விலை ஏற்றம் கண்டுள்ளது. அதன் காரணமாக இலங்கையில் இன்று முதல் எரிபொருளின் விலை 25 முதல் 30 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது என சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. தங்கள் நாட்டுக்கு தேவையான பெட்ரோலியம் பொருட்களை இலங்கை இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர், மலேசியா, தென் கொரியா மற்றும் ஈரானில் இருந்து இந்த பொருட்களை இலங்கை பெறுகிறது. தற்போது போர் காரணமாக அந்த விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரியையும் இலங்கை இறக்குமதி செய்து வருகிறது.
இலங்கையில் பெட்ரோல் விலை: தற்போது இலங்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82 உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.398-க்கு விற்பனை ஆகிறது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.79 உயர்ந்து, ஒரு லிட்டர் டீசல் ரூ.382-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.255-க்கு விற்பனை ஆகிறது.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு கடந்த 2022-ல் இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்தது. அப்போது இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதனால் இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்தது. மேலும், கடுமையான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கை இருளில் மூழ்கியது. அப்போது பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. தற்போதைய விலையேற்றம் மீண்டும் அதை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.