1990-களில் ஜம்மு - காஷ்மீர் மசூதிகளில் நள்ளிரவுகளில் இமாம்களால் சத்தமிட்ட ஒலிபெருக்கிகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன. இங்கு அல்ல; இப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கேட்கிறது.
பாகிஸ்தான் ராணுவத்தினர் நிகழ்த்தும் அட்டூழியங்கள் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்று திரளுங்கள் என முசாபராபாத்தைச் சேர்ந்த இமாம்கள் (மத குருமார்கள்) ஒலிபெருக்கியில் மக்களைத் தீவிரமாக அழைக்கிறார்கள்.
கடந்த 1990-களில் இதே மசூதிகளில்தான் இரவு நேரங்களில் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களும், மதப்பிரச்சாரங்களும், பண்டிட்களுக்கு எதிரான மிரட்டல்களும் விடுக்கப்பட்டு, மக்களை இந்தியாவுக்கு எதிராகப் போராட வைத்தது.
ஸ்ரீநகர், பூஞ்ச் மற்றும் எல்லைக்கு அப்பால் உள்ள சலோத்ரி மசூதிகளிலிருந்து விடுக்கப்பட்ட அழைப்பால், பூஞ்ச் மாவட்டத்தின் பல இளைஞர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் சென்றனர். காஷ்மீரில் பண்டிட்களை ஒட்டுமொத்தமாக விரட்டும் வேலையில் இறங்கி, தேசத்துக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷமிட்டுப் போராட்டம் நடத்தினர்.
ஆனால், இப்போது நிலைமை அப்படியே மாறி, பாகிஸ்தானைத் திருப்பி அடித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முசாபராபாத், ரவாலாகோட் ஆகிய பகுதிகளில் ராணுவத்துக்கு எதிராகக் கடந்த 2 மாதங்களாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை ராணுவத்தினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மற்றும் ஈரக்கமின்றி நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 முதல் 30 வயதுடைய இளைஞர்கள் 80-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
போராட்டத்துக்கு என்ன காரணம்?
பாகிஸ்தானின் பிரதான நகரங்களுக்கு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்துதான் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. இருப்பினும், இங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் பின்தங்கியே உள்ளது. கடுமையான பணவீக்கம், தொடர் மின்வெட்டு, கோதுமை மாவு பற்றாக்குறை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வு ஆகியவற்றால் உள்ளூர் மக்கள் கொதிப்படைந்தனர்.
இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் பாகிஸ்தான் அரசுக்கும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிர்வாகத்திற்கும் இடையே கடந்த அக்டோபர் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இதனால் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான மனநிலையில் இருந்த மக்களை ஜம்மு ‘காஷ்மீர் ஜாயின்ட் அவாமி ஆக்சன் கமிட்டி’ என்ற அமைப்பு ஒன்று திரட்டி, கடந்த ஜூன் மாதத்திலிருந்து ரவாலாகோட், முசாபராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இதற்கிடையே ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 53 இடங்களுக்களில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்த அறிவிக்கப்பட்டது. இதில் 1947-இல் இந்தியாவில் இருந்து வந்த அகதிகளுக்காக 12 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு வெளியே வசிக்கும் அகதி வாக்காளர்கள் வாக்களிப்பது, உள்ளூர் மக்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் எனக் கூறி, இந்த 12 இடங்களை ரத்து செய்யுமாறு ‘ஜேகேஜேஏஏசி’ வலியுறுத்தியது.
ஆனால், ‘ஜேகேஜேஏஏசி’ விடுத்த கோரிக்கையைக் கண்டுகொள்ளாமல் பாகிஸ்தான் அரசு தேர்தல் பணியைத் தொடங்கியது. இதையடுத்து, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பிரமாண்ட பேரணியை ‘ஜேகேஜேஏஏசி’ அமைப்பு முன்னெடுத்தது.
இளைஞர்கள் குறிவைத்து கொலை
பல்வேறு நகரங்களில் நடந்த இந்தப் பேரணியை ஒடுக்க பாகிஸ்தான் ராணுவம் கொடூரமான அடக்குமுறையையும், துப்பாக்கி சூட்டையும் நடத்தியது. ரவாலாகோட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ‘ஜேகேஜேஏஏசி’ அமைப்பின் தலைவரது சகோதரரும், பல்கலைக்கழகப் பேராசிரியருமான ஒசாமா ஜலீல் கொல்லப்பட்ட பின்பு போராட்டம் தீவிரமடைந்தது.
கடந்த வாரத்தில் மட்டும் ஏறக்குறைய 15 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 50 பேரைப் பாகிஸ்தான் ராணுவம் இரக்கமின்றிச் சுட்டுக் கொன்றது. கடந்த மாத இறுதி வரை 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உண்மைகளை மறைக்க அல்ஜசீரா, ராய்ட்டர்ஸ் போன்ற சர்வதேச ஊடகங்களுக்குப் பாகிஸ்தான் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், ‘ஜேகேஜேஏஏசி’ அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் மறைத்துள்ளதாக ராணுவத்தின் மீது மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இந்தியாவின் நிலைப்பாடு
ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிர்வாகத்திற்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையே பல தசாப்தங்களாக உறவு சுமூகமாக இல்லை. ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களைப் பாகிஸ்தான் அரசியல் கட்சிகள் இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்திக் கொண்டனவே தவிர, அவர்களின் வளர்ச்சியைப் பொருட்படுத்தவில்லை. பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப், அப்பகுதி மக்களை “இந்தியர்களைப் போன்ற எதிரிகள்” என்று குறிப்பிட்டது மக்களின் கோபத்தை மேலும் அதிகரித்தது.
தசாப்தங்களாக கைபர்-பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் பகுதி மக்கள் பொருளாதார, வாழ்வாதார, அரசியல் நிலைத்தன்மைக்காகப் போராடி வருவதைப் போலவே இங்கும் அதேபோன்ற போராட்டங்களும் கிளர்ச்சிகளும் நடைபெற்றுவருகிறது.
இந்தியாவுக்கான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி அமைந்துள்ளது. இங்கு ஸ்திரமற்ற தன்மை உருவானால், அது இந்தியாவுக்குச் சாதகமாக மாறிவிடும் எனப் பாகிஸ்தான் அஞ்சுகிறது. அதற்காகத்தான் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் முனைப்பில் ராணுவத்தைக் கட்டவிழ்த்துள்ளது.
இங்கு ஏதேனும் பெரிய அளவிலான கிளர்ச்சி ஏற்பட்டு நிலைமை கைமீறிச் சென்று இந்தியாவுக்குச் சாதகமாக மாறுவதைப் பாகிஸ்தான் பொறுத்துக்கொள்ளாது என்பதை ராணுவ அடக்குமுறை வெளிப்படுத்துகிறது என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்தியா கூறுவது என்ன?
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “பாகிஸ்தான் ராணுவத்தின் கடுமையான ஒடுக்குமுறையால் 40-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். போராடும் மக்களைப் பாதுகாப்பு அமைச்சரே ‘எதிரிகள்’ என முத்திரை குத்துவது, மக்கள் மீதான அவர்களின் அலட்சியப் போக்கைக் காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியப் பிரதமரின் சிறப்பு உதவியாளர் கூறுகையில், “இந்தியாவைப் பலவீனப்படுத்த பாகிஸ்தானால் பயிற்சி அளித்து அனுப்பப்பட்ட அதே ‘முஜாஹிதீன்கள்’, இப்போதுத் தங்களைத் தூண்டிய அரசுக்கு எதிராகத் திரும்பிவிட்டனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் தேர்தல்கள் ஒரு முழுமையான கேலிக்கூத்து. உண்மையில் அங்கு நடப்பது, மக்கள் போராட்டங்களும், அவர்களுக்கு எதிரான கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடுகளும்தான். இத்தகைய தேர்தல்களால், அங்கு நடைபெறும் மக்கள் போராட்டங்களையும் பாகிஸ்தான் படைகளின் கண்மூடித்தனமான கொலைகளையும் மறைக்க முடியாது.
சமீப மாதங்களாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒடுக்குமுறை தீவிரமடைந்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தொடர்ந்து நடைபெறும் ஒடுக்குமுறையில் குறைந்தது 90 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். ‘தேர்தல்’ என்ற போர்வையைப் பயன்படுத்தி தனது நடவடிக்கைகளுக்கு சட்ட அங்கீகாரம் பெற பாகிஸ்தான் முயல்கிறது.
துப்பாக்கிச்சூடு, மின்வெட்டு, மிரட்டல், ஒடுக்குமுறை ஆகியவற்றின் மூலமே, மக்களின் அதிருப்திக்கு பாகிஸ்தான் பதிலளித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்க சர்வதேச கண்காணிப்பு தேவை. மனித உரிமைகள் குறித்த பாகிஸ்தானின் பாசாங்குத்தனமான உபதேசங்களின் பின்னணியில் உள்ள உண்மையை உலகம் புரிந்து கொள்ள வேண்டும்” என்று இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.