இஸ்லாமாபாத்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) சுழற்சி முறை தலைமையின் அடிப்படையில், 2027-ம் ஆண்டுக்கான வருடாந்திர மாநாட்டை நடத்தும் பொறுப்பை பாகிஸ்தான் பெற்றுள்ளது.
இந்த அமைப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான் மற்றும் பெலாரஸ் ஆகிய 10 நாடுகள் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: எஸ்சிஓ உச்சி மாநாட்டை நடத்தும் பொறுப்பை ஏற்கும் நாடு, அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுப்பது கடமையாகும்.
அந்த வகையில், அமைப்பின் விதிமுறைகள், மரபுகளைப் பின்பற்றி, இந்தியப் பிரதமர் உட்பட அனைத்து உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்பது தொடர்பான முடிவுகள், அழைப்பிதழ் அனுப்பப்பட்ட பின்னரே பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.