இம்ரான் கான்

 
உலகம்

இம்ரான் கானை சிறையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு

வெற்றி மயிலோன்

இஸ்லாமாபாத்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, மருத்துவ சிகிச்சைக்காக இஸ்லாமாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 2023 ஆகஸ்ட் முதல் ராவல்பிண்டியில் உள்ள அடிலாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பை வென்ற முன்னாள் கேப்டனான இம்ரான் கான் சிறையில் மரணப் படுக்கையில் இருப்பதாகத் தொடர்ந்து வதந்திகள் பரவி வருகின்றன. இந்தச் சூழலில், இம்ரான் கானை மருத்துவ சிகிச்சைக்காக இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டது.

அரசின் ஆட்சேபனைகளை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இம்ரான் கானை 48 மணி நேரத்திற்குள் ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்டது. அவர் செப்டம்பர் 16 வரை அங்கு இருப்பார். இம்ரான் கானின் தனிப்பட்ட மருத்துவர் மற்றும் அவரது சகோதரி டாக்டர் அலீமா கான் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழு ஒன்றும் அவரின் உடல்நிலையை ஆய்வு செய்ய அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு குறித்து பேசிய இம்ரான் கானின் ஆலோசகர் ஜுல்பிகார் அலி புகாரி, “இது மிகவும் வரவேற்கத்தக்க உத்தரவு; இது இன்னும் முன்னதாகவே நடந்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அப்படி நடந்திருந்தால் அவரது கண் மற்றும் பொதுவான உடல்நிலை இவ்வளவு மோசமடைந்திருக்காது,” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT