வாஷிங்டன்: ஈரான் போரில் சமரசம் செய்த பாகிஸ்தான், அமெரிக்காவிடம் ரூ.96 ஆயிரம் கோடி நிதியுதவி கோரி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. இதையடுத்து, சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) பாகிஸ்தானுக்கு அவ்வப்போது நிதியுதவி வழங்கி வருகிறது.
இந்த ஐஎம்எப் மீட்புத் திட்டம் அமலில் உள்ள போதிலும், அந்நாட்டில் பல தசாப்தங்களில் இல்லாத மோசமான பொருளாதார நெருக்கடி தொடர்கிறது. சீனா, சவுதி அரேபியா உள்ளிட்ட நட்பு நாடுகளிடமிருந்து பெறப்படும் கடன் கால நீட்டிப்பு ஆகியவற்றையே பெரிதும் சார்ந்துள்ளது. இதனால், வெளிநாட்டு நிதி உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் அந்நாடு எளிதில் பாதிப்புக்குள்ளாகும் சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில், தனது பலவீனமான பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் முயற்சியாக அமெரிக்காவிடம் பாகிஸ்தான் அரசு நிதியுதவி கோரி இருப்பதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெஸன்ட்டிடம் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையில், “5 ஆண்டுகள் வரை முதிர்வு காலம் கொண்ட 10 பில்லியன் டாலர் மதிப்பிலான (ரூ.96 ஆயிரம் கோடி) ‘இருதரப்பு பரிவர்த்தனை நிலைப்படுத்தல் ஆதரவு வசதியை வழங்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க-ஈரான் போரின்போது இருதரப்புக்கும் இடையே, சமரச முயற்சியை பாகிஸ்தான் மேற்கொண்டது. இது அந்நாட்டின் ராஜதந்திர அந்தஸ்தை உயர்த்தியது. இதனால்தான் அமெரிக்காவிடம் நிதியுதவி கோரி உள்ளதாகக் கூறப்படுகிறது.