இஸ்லாமாபாத்: மத்திய கிழக்கில் போரில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் இடையே சமரச முயற்சியை ஏற்படுத்த பாகிஸ்தான் முயன்று வருவதாக ‘பைனான்சியல் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீருக்கும் ஈரானுக்கும் இடையில் உள்ள நெருக்கமும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் அவர் கொண்டுள்ள சுமுகமான உறவும் இந்தப் பேச்சு வார்த்தை முயற்சிக்கு அடிப்படையாக அமைந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீதான தாக்குதல்களைக் கண்டிக்கும் அதே வேளையில், பதற்றத்தை தணிக்க ராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என ஈரானிடம் பாகிஸ்தான் கோரி வந்தது.
இந்நிலையில், ட்ரம்ப் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை இந்த வாரத்திலேயே இஸ்லாமாபாத்தில் நடத்த பாகிஸ்தான் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஞாயிற்றுக்கிழமை அதிபர் ட்ரம்ப்புடன் பேசியதாகவும். மறுபுறம், பிரதமர் ஷபாஸ் ஷெரீப் திங்களன்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.