இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார். அவருக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ரூ.8.5 கோடி மதிப்பிலான கைக்கடிகாரத்தை பரிசளித்தார். அதை அரசின் கருவூலத்தில் சேர்க்காமல், அதை விற்பதற்கு இம்ரான் கான் மனைவி புஷ்ரா பீபி முயன்றார்.
இது தொடர்பான வழக்கில் இம்ரான் கான், புஷ்ராவுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் இம்ரான்கானின் எக்ஸ் தள பக்கத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு தகவல் வெளியிடப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது: கடந்த 3 ஆண்டுகளாக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் எனக்கு தண்டனைகள் வழங்கப்பட்டன. அதுபோல், பரிசு பொருள் வழக்கில் எனக்கு கிடைத்த தண்டனை எனக்கு புதிதல்ல. எனது தரப்பு வாதங்கள் இந்த வழக்கில் கேட்கப்படவில்லை. நானும், எனது மனைவியும் தனிமை சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைகளை அனுபவித்து வருகிறோம். சட்டம் மற்றும் அரசியலமைப்பை நிலைநாட்ட நமது வழக்கறிஞர்கள் அணி போராட வேண்டும்.
நீதிக்காக போராட தெரு இயக்கத்தை உருவாக்க வேண்டும். தேசிய அளவில் போராட்டம் நடத்தப்பட வேண்டும். பாகிஸ்தானின் உண்மையான சுதந்திரத்துக்காக நான் எனது வாழ்க்கையை தியாகம் செய்யவும் தயாராக உள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானுக்கு சிறை நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், அவர் சார்பில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளளது.