கோப்புப் படம்
வாஷிங்டன்: ஈரான் ஒப்பந்த விவரங்களை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்துக்கு பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லாததே காரணம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட கத்தாருடன் இணைந்து உதவிய நாடு பாகிஸ்தான். இந்த இடைக்கால அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த 15-ம் தேதியே அறிவித்தார். எனினும், ஒப்பந்தத்தின் அதிகாரப்பூர்வ விவரங்கள் இரண்டு நாட்களுக்குப் பிறகே வெளியிடப்பட்டன.
இந்நிலையில், இந்த தாமதத்துக்கு பாகிஸ்தானில் ஊடக சுதந்திரம் இல்லாததே காரணம் என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் விமர்சித்துள்ளார்.
பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜே.டி.வான்ஸ், “உண்மையில் நாங்கள் அதை வெளியிடவே விரும்பினோம். இங்குள்ள (அமெரிக்கா) கருத்து வேறுபாட்டுக்கான ஒரு காரணம் என்னவென்றால், பேச்சு சுதந்திரத்தையும் ஊடக சுதந்திரத்தையும் பாதுகாக்க அமெரிக்காவில் இருப்பது போன்ற ஒரு சட்டம் பாகிஸ்தானில் இல்லை. அங்கு ஊடக சுதந்திரம் முழுமையாக இல்லை.
ஒப்பந்த விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டு அமெரிக்க மக்கள் அதை ஆராய்ந்து பார்த்து பகுப்பாய்வு செய்து புரிந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பாகிஸ்தானில் இல்லை. 14 அம்சங்களைக் கொண்ட அந்த புரிந்துணர்வு ஒப்பந்தப்படி ஈரானுக்கு அமெரிக்கா எந்த நிதி உதவியும் வழங்காது. அதேநேரத்தில், ஈரான் தங்கள் வசம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அழிப்பதை அது உறுதி செய்யும். பிற நாடுகளின் முதலீடுகள் மூலம் ஈரானுக்கு பொருளாதார நன்மைகள் கிடைக்கலாம். ஆனால், அவர்கள் தங்கள் நாட்டின் அடிப்படையை மாற்றினால் மட்டுமே அது சாத்தியமாகும். நாங்கள் அவர்களின் நாட்டை மாற்றி அமைத்துள்ளோம். இது அமெரிக்காவுக்கு நல்லதுதானே?” என தெரிவித்துள்ளார்.
உலக ஊடக சுதந்திர குறியீட்டில் 180 நாடுகளில் பாகிஸ்தான் 153-வது இடத்தில் உள்ளது. உண்மையில் பல பத்தாண்டுகளாகவே பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் நிறைவேற்றப்பட்ட 27-வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம், அடிப்படை உரிமைகளை தன்னிச்சையாக மறு ஆய்வு செய்யும் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை பறித்தது. இது, அந்நாட்டின் பத்திரிகை சுதந்திரத்தை மேலும் முடக்குகிறது.