காபூல்: ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் விமானப்படையினர் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 18 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லைப்புற மோதல்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றன. தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் அடிக்கடி பாகிஸ்தான் விமானப்படை வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று திடீரென நங்கர்ஹார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் வான்வழித் தாக்குதலை நடத்தினர். இந்த பயங்கரத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இது குறித்து ஆப்கானிஸ்தான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறும்போது, “பாகிஸ்தான் ராணுவத்தினர் நங்கர்ஹார் மாகாணத்திலுள்ள பெஹ்சுத் மாவட்டத்தில் ஒரு வீட்டை குறிவைத்து நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 23 பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் புதைந்தனர். அவர்களில் இதுவரை 4 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்றார்.
தெஹ்ரிக்-இ தலிபான் பாகிஸ்தான் என்றழைக்கப்படும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், உளவுத்துறை தகவலின் அடிப்படையில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் பாகிஸ்தானைச் சேர்ந்த அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்தார்.
இதேபோல், பாக்டிகா மாகாணத்தின் பெர்மல் மாவட்டம், நங்கர்ஹார் மாகாணத்தின் கோக்யானி மாவட்டத்தின் பல பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பல முறை வான்வழித்தாக்குதல்களை நடத்தியுள்ளனர். கடந்த சனிக்கிழமை முதல் இங்கு தாக்குதல் நடைபெற்று வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.