ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்ததை அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்து ஒரு பேரல் விலை 74.5 டாலராக விற்பனையாகி வருகிறது.
துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டின் இடையே செய்தியாளர்களை சந்தித்த டொனால்டு டரம்ப், “என்னை பொறுத்தவரை ஈரானுடனான தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவுற்றது. ஈரான் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் சில நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்கிறார்கள். பின்னர் பொதுவெளியில் அவற்றை மறுக்கிறார்கள். இனி, நேர்மையான முறையில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என நான் நம்பவில்லை. அவர்கள் பொய்யர்கள்.
ஈரானுடனான பேச்சுவார்த்தையை அமெரிக்க தரப்பு தொடர்ந்து நடத்தலாம். ஆனால், அது நேரத்தை வீணடிக்கும் செயல் என்றே நான் நினைக்கிறேன். அவர்கள் பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்கள், மனநிலை சரியில்லாதவர்கள்.” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த கத்தார் நாட்டின் திரவ இயற்கை எரிவாயு ஏற்றிச் சென்ற கப்பல், சவூதி அரேபியாவின் எண்ணெய் கப்பல் உள்ளிட்ட 3 வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார் தளங்கள், புரட்சிகர காவலர் கப்பல்கள் உள்பட 80-க்கும் மேற்பட்ட ஈரானிய இலக்குகளை அமெரிக்கப் படைகள் தாக்கின. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக, பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள 85 அமெரிக்க ராணுவ தளங்களைக் குறிவைத்து தாக்கியதாக ஈரான் தெரிவித்தது.
மீண்டும் தொடங்கிய இந்த மோதலால், கப்பல் உரிமையாளர்கள் மற்றும் பிராந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் மத்தியில் புதிய அச்சம் எழுந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
இதன் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் புதிய தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் இது அதிகரித்துள்ளது. இத்தகைய காரணங்களால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று 6% அளவுக்கு உயர்ந்து, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 74.5 டாலருக்கு விற்பனையாகி வருகிறது.
பங்குச் சந்தைகளிலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. ஐரோப்பிய பங்குகள் 1.6% சரிவைச் சந்தித்தன. பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கும் என்ற எண்ணம் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்ததை அடுத்து, டாலர் வலுப்பெற்றுள்ளது.
இதனிடையே, விதிமுறைகளை வளைப்பது, போட்டியாளர்களை அச்சுறுத்துவது, தடைகளை உருவாக்குவது போன்ற செயல்களில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக ஈரான் அதிபர் மசூத் பெஷஷ்கியான் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உலகக் கோப்பையை நடத்தும் அமெரிக்க அரசாங்கத்தின் நடத்தை அதன் வெளியுறவுக் கொள்கையைப் பிரதிபலிக்கிறது. விதிகளை வளைப்பது, போட்டியாளர்களை மிரட்டுவது, தடைகளை உருவாக்குவது, ஏமாற்றுவது ஆகியவைதான் அவர்களின் மெகா கொள்கை. இத்தகைய விளையாட்டுக்களை ஈரான் நிராகரிக்கிறது. நாங்கள் எங்கள் உரிமைகளுக்காக உறுதியாக நிற்கிறோம்” என தெரிவித்துள்ளார்.