உலகம்

“தீவிரவாதத்தை எதுவும் நியாயப்படுத்த முடியாது” - இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

செய்திப்பிரிவு

டெல் அவிவ்: ‘‘தீவிரவாதத்தை எதுவும் நியாயப்படுத்த முடியாது ’’ என்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி திட்டவட்டமாகக் கூறினார்.

பிரதமர் மோடி 2 நாள் பயண​மாக நேற்று இஸ்​ரேல் சென்​றார். டெல் அவிவ் விமான நிலை​யத்​தில் பிரதமர் மோடியை இஸ்​ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்​யாகு கட்​டியணைத்து உற்​சாக​மாக வரவேற்​றார். அங்கு இரு நாட்டு தேசிய கீதங்​களை​யும் ராணுவ பேண்ட் குழு​வினர் இசைத்​தனர். பின்​னர், நாடாளு​மன்​றத்​துக்கு இரு​வரும் சென்​றனர்.

          

இஸ்​ரேல் நாடாளு​மன்​றம் ‘நெசட்​டில்’ பிரதமர் மோடி சிறப்​புரை​யாற்​றி​னார். அவர் இஸ்​ரேல் நாடாளு​மன்​றத்​தில் நுழைந்த போது, மோடி.. மோடி என இஸ்​ரேல் எம்​.பி.க்​கள் உற்​சாக​மாக கோஷம் எழுப்பி வரவேற்​றனர்.

சகோதர நாடு​கள்: இஸ்​ரேல் நாடாளு​மன்​றத்​தில் பிரதமர் நெதன்​யாகு பேசுகை​யில், ‘‘இஸ்​ரேலின் சிறந்த நட்பு நாடு இந்​தி​யா. இந்​தி​யா​வும் இஸ்​ரேலும் சகோதர நாடு​கள். பிரதமர் மோடி இஸ்​ரேல் வந்​துள்​ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்​கிறது. இந்​தி​யா​வும் இஸ்​ரேலும் தங்​கள் உறவை வலுப்​படுத்தி வரு​கின்​றன. மோடியைக் கட்​டிப்​பிடித்து வரவேற்​பது உண்​மை​யிலேயே மிகச் சிறப்​பானது. இரு நாடு​கள் இடையே​யான வர்த்​தகம் இரு மடங்கு அதி​கரித்​துள்​ளது. ஒத்​துழைப்பு 3 மடங்கு அதி​கரித்​துள்​ளது. புரிதல் 4 மடங்கு அதி​கரித்​துள்​ளது. இஸ்​ரேலுக்கு ஆதர​வாக பிரதமர் மோடி உள்​ளார். இந்​தி​யா​வும் இஸ்​ரேலும் பல நல்ல விஷ​யங்​களை பகிர்ந்து கொள்​கின்​றன. யூதர்​களுக்கு இந்​தி​யா​வில் வரவேற்பு அளிக்​கப்​படு​கிறது. இந்​தியா சக்​தி​வாய்ந்த நாடு’’ என்​றார்.

இஸ்​ரேல் நாடாளு​மன்​றத்​தில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: தீவிர​வாதத்தை எது​வும் நியாயப்​படுத்த முடி​யாது. அக்​டோபர் 7-ம் தேதி ஹமாஸ் நடத்​திய தாக்​குதலில் உங்​கள் வேதனையை உணர்கிறேன். மும்பை தீவிர​வாத தாக்​குதலும், இஸ்​ரேலில் நடை​பெற்ற தீவிர​வாத தாக்​குதலும் ஒன்​று​தான். பொது​மக்​களை கொல்​வதை நியாப்​படுத்த முடி​யாது. தீவிர​வாதம் அமை​தி​யைக் கெடுக்​கிறது. சமூகத்தை அழிப்​பது​தான் தீவிர​வாதத்​தின் நோக்​கம். தீவிர​வாதத்​தில் இரட்டை நிலை இருக்க முடி​யாது. தீவிர​வாத விஷ​யத்​தில் இஸ்​ரேலுக்கு ஆதர​வாக இந்​தியா உள்​ளது. இப்​பகு​தி​யில் நிலை​யான அமைதி நிலவ வேண்​டும் என இந்​தியா விரும்​பு​கிறது.

பாலஸ்​தீன பிரச்​சினைக்​குத் தீர்வு காண வேண்​டிய நேரம் வந்​துள்​ளது. அமை​திக்​கான பேச்​சு​வார்த்​தையைத் தொடங்க வேண்​டும் என இந்​தியா வலி​யுறுத்​துகிறது. இந்​தி​யா​வில் யூதர்​கள் அச்​சமின்றி வசிக்​கின்​றனர். இந்​தியா யூதர்​களின் தாய்​நா​டாக உள்​ளது. நமது உறவு ரத்​தம் மற்​றும் தியாகத்​தால் எழுதப்​பட்​டுள்​ளது. தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தத்தை செயல்​படுத்​து​வது குறித்து இந்​தி​யா​வும் - இஸ்​ரேலும் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறது. இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்.

இந்தியாவின் வான் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள ‘சுதர்ஸன சக்கரம்’ ஆயுத தயாரிப்பில் ஒருங்கிணைந்து செயல்படுவது, இஸ்ரேலின் வான் பாதுகாப்பு கருவியான அயர்ன்டோம் ஏவுகணை தொழில்நுட்பத்தை அளிப்பது குறித்தும் இரு நாட்டு பிரதமர்கள் ஆலோசனை நடத்தினர்.

பிரதமர் மோடி இதற்கு முன்பு கடந்த 2017-ம் ஆண்டு இஸ்​ரேலுக்கு அரசு முறைப் பயணம் மேற்​கொண்​டார். அதன்​பின் 9 ஆண்​டு​கள் கழித்து தற்​போது அரசு முறைப் பயணம் சென்​றுள்​ளார்.

இஸ்​ரேல் நாடாளு​மன்​றத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அர்​ஜென்​டினா அதிபர் ஜாவீர் மிலே உட்பட சிலர் மட்​டுமே உரை நிகழ்த்​தி​யுள்​ளனர். இஸ்​ரேல் நா​டாளு​மன்​றத்​தில் உரை​யாற்​றிய முதல் இந்​திய அரசி​யல்​ தலை​வர்​ பிரதமர்​ மோடி என்​பதும்​ குறிப்​பிடத்​தக்​கது. இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடிக்கு, அங்குள்ள இந்தியர்கள் ஜெருசலேமில் உள்ள கிங் டேவிட் ஓட்டலில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்த பின் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘பிரதமர் நெதன்யாகுவுடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது. அவர்கள் அளித்த உற்சாக வரவேற்புக்கு நன்றி தெரிவித்தேன். 9 ஆண்டுகளுக்கு பின்பு இஸ்ரேல் வந்தது மகிழ்ச்சி. இரு நாடுகளும் பல துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசித்தோம். இதன் மூலம் இரு நாடுகளின் உறவு வலுப்பெறும். காசாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் ஆலோசித்தோம்’’ என்றார்.

விமான பாதை: பிரதமர் மோடி இந்தியா ஒன் விமானத்தில் நேற்று காலை 9 மணிக்கு இஸ்ரேல் புறப்பட்டார். அவரது விமானம் சவுதி அரேபியா வான் எல்லையை கடந்து டெல் அவிவ் சென்றது. சுமார் 6 மணி நேரம் பிரதமர் மோடி பயணம் செய்தார். இந்த விமானப் பாதையை பிளைட்ரேடார் 24 இணையதளத்தில் 9,225 பேர் கண்காணித்துள்ளனர். இது உலகளவில் மிக அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT