ஸ்டாக்ஹோம்: இயற்பியலுக்கான நோபல் பரிசு பெல்ஜியத்தைச் சேர்ந்த விஞ்ஞானி பிரான்சிஸ் ஹேல்சனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகத்துக்கு முக்கியப் பங்களிப்புகளை வழங்கியதற்காக பிரான்சிஸ் ஹேல்சன் நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கும், அமைதிக்காக பாடுபட்டவருக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
உலகளவில் மிகப்பெரிய கவுரவமாக கருதப்படும் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோர் பெயரை அறிவிக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில், மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு பெறுவோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள மேடிசன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் விஞ்ஞானியாக பணியாற்றும் பெல்ஜியத்தை சேர்ந்த பிரான்சிஸ் ஹேல்சனுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஐஸ் கியூப் நியூட்ரினோ ஆய்வகத்துக்கு ஆற்றிய பங்களிப்புக்காகவும் மற்றும் வானியல் தோற்றம் கொண்ட உயர் ஆற்றல் நியூட்ரினோக்களைக் கண்டுபிடித்ததற்காகவும் 82 வயதான பிரான்சிஸ் ஹேல்சன் நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஹேல்சனின் யோசனையில் உருவான ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகம், தொலைதூர அண்டத்தில் தோன்றும் நியூட்ரினோக்களைக் கண்காணிக்கிறது. இந்த ஐஸ்கியூப் ஆய்வகத்தால் தொடர்ந்து பதிவு செய்யப்படும் நியூட்ரினோ தொடர்பான நிகழ்வுகள், உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோக்கள் உருவாக்கப்படக்கூடிய வன்முறைச் சூழல்கள் பற்றிய தகவல்களை ஆராய்ச்சியாளர்களுக்கு தொடர்ந்து வழங்கும். இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுத்தொகை 1 கோடியே 20 லட்சம் சுவீடன் பணம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.11.55 கோடி) ஆகும். இந்த பரிசு வரும் டிசம்பர் மாதம் வழங்கப்படும்.
என்ன கண்டுபிடிப்பு?
விண்வெளி ஆராய்ச்சிகள் தற்போது தொலைநோக்கிகள் வழியாக வானியல் நிகழ்வுகளைப் பார்ப்பதன் மூலமாகவே நடைபெற்று வருகின்றன. ஒளிக்கதிர் மூலமாகவே இந்த ஆய்வுகள் நடக்கின்றன. ஆனால், விண்வெளியில் உள்ள மேகக் கூட்டம், வாயுக்கள், துகள்கள் இடையூறாக இருப்பதால் விண்வெளி நிகழ்வுகளை துல்லியமாக விஞ்ஞானிகளால் பார்க்க முடிவதில்லை.
புகைப்படங்கள் தெளிவற்ற நிலையிலும், வளைந்து நெளிந்த நிலையிலும் கிடைக்கின்றன. இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் பெல்ஜியத்தைச் சேர்ந்த விஞ்ஞானி பிரான்சிஸ் ஹேல்சன் இறங்கினார்.
‘கோஸ்ட் பார்டிக்கிள்’ என்று கூறப்படும் நியூட்ரினோக்கள், பொருட்களை ஊடுருவிச் செல்லும் திறன் பெற்றவை. கோடிக்கணக்கான நியூட்ரினோக்கள் நம்மை அன்றாடம் ஊடுருவிச் செல்கின்றன. அதன்மூலம் விண்வெளி ஆய்வை மேற்கொள்ள ஹேல்சன் முடிவெடுத்தார். ஆனால், மின்னேற்றம் இல்லாத நியூட்ரினோக்களை பிடிப்பது சிரமம் என்பதால், அண்டார்டிக் பகுதியில் ஐஸ்க்யூப் ஆய்வகம் அமைக்க முடிவெடுத்தார்.
அவரது முயற்சியில் அண்டார்டிக் பகுதியில் 2 கி.மீ. தொலைவிற்கு துளையிடப்பட்டது. இந்த துளை வழியாக நியூட்ரினோக்கள் செல்லும்போது, இந்த ஆய்வகம் மீன்வலை போல செயல்பட்டு பிரத்யேக தொடர்பு மூலம் நியூட்ரினோக்களுக்கும் மின்னேற்றம் வழங்கி அவை எங்கிருந்து வருகின்றன என்பதற்கான தொடர்பை ஏற்படுத்தும். இதன்மூலம் எந்த இடையூறுமின்றி இந்த நியூட்ரினோக்கள் விண்வெளியை ஆராயும் தொலைநோக்கி போல செயல்படும். இதன்மூலம் 4 பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் நடந்தவற்றைக்கூட கண்டறிய முடியும் என்று கூறப்படுகிறது. வளிமண்டலங்கள், கருந்துளைகளை எந்த தடையுமின்றி இதன்மூலம் ஆராய முடியும்.
6 ஆண்டு முயற்சி
ஹேல்சன் குழுவினர் 6 ஆண்டுகள் சிரமங்களை மேற்கொண்டு, கொதிநிலையில் உள்ள வெந்நீர் டிரில்லிங் மூலம் அண்டார்டிக் பனிக்கட்டிகளை துளையிட்டு இந்த ஆய்வகத்தை 2011-ம் ஆண்டு அமைத்து முடித்தனர். இந்த ஆய்வக உதவியுடன் 2017ம் ஆண்டு ‘பிளேசர்’ எனப்படும் பெரும் கருந்துளை ஒன்று முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டது.
நமது பூமி இடம்பெற்றுள்ள பால்வளி மண்டலத்தின் மையப் பகுதியில் நடக்கும் நிகழ்வுகளையும் விஞ்ஞானிகளுக்கு படம் பிடித்துக் காட்டியுள்ளது. இது முதல் முறை சாதனை என்று இயற்பியல் அறிஞர்களால் போற்றப்படுகிறது. எதிர்காலத்தில் நியூட்ரினோ ஐஸ்க்யூப் ஆய்வகம் மூலம் விண்வெளி ‘மேப்’ ஒன்றை உருவாக்க முடியும் என்பதால் ஹேல்சனின் கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.