ஸ்டாக்ஹோம்: கனடா எழுத்தாளர் ஆன் கார்சனுக்கு (76) இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் இருந்து 200 எழுத்தாளர்களின் பெயர்கள் இலக்கிய நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டன. இதில் இருந்து 20 பேரின் பெயர்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன. அவர்களில் கனடாவை சேர்ந்த எழுத்தாளர் ஆன்கார்சனுக்கு நேற்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து நோபல் பரிசு கமிட்டி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கனடா கவிஞர், எழுத்தாளர் ஆன் கார்சனின் எழுத்துகள் புதுமை, நகைச்சுவை நிறைந்தவையாக உள்ளன. தற்கால இலக்கியத்தில் அவர் புதிய பாணிகளை அறிமுகம் செய்துள்ளார். குறிப்பாக கவிதை, மொழிபெயர்ப்பில் அவரது பங்களிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. அவரது படைப்புகள் வாழ்வியல் தத்துவங்களை தெளிவாக விளக்குகின்றன.
பழங்கால கிரேக்க, லத்தீன் இலக்கியங்களை அவர் புதுமை பாணியில் உலகத்துக்கு சமர்ப்பித்து உள்ளார். அவரது படைப்புகளில் கவிதை, கதை, நாடக இலக்கியங்கள் ஒன்றிணைந்து காணப்படுகின்றன. பல்வேறு முக்கிய வார்த்தைகள் எவ்வாறு தோன்றின, அவற்றின் அர்த்தங்கள் என்ன என்பதை அவர் எடுத்துரைத்து உள்ளார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 1998-ம் ஆண்டில் “ஆட்டோபயோகிராபி ஆப் ரெட்” என்ற நாவலை எழுத்தாளர் ஆன் கார்சன் வெளியிட்டார். இந்த நாவல் அவரது மிகச் சிறந்த படைப்பாக போற்றப்படுகிறது. கிரேக்கத்தின் 10 பண்டைய கால தொகுப்புகளை அவர் மொழிமாற்றம் செய்திருக்கிறார். 20-க்கும் மேற்பட்ட கவிதை தொகுப்புகளை வெளியிட்டு உள்ளார். அவரது ஒட்டுமொத்த படைப்புகளுக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.