ஸ்டாக்ஹோம்: நூற்றாண்டு பழமையான வேதியியல் புதிருக்கு தீர்வுகண்ட பிரான்ஸ் மற்றும் ஜப்பானை சேர்ந்த 2 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் உலக அமைதிக்காக பாடுபட்டோருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 2026-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகளை பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல் துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. அதைத் தொடர்ந்து வேதியியலுக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.
நேரியல் அல்லாத விளைவுகள், தன்வினையூக்கம் ஆகியவற்றை கண்டறிந்ததற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹென்றி பி. காகன், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கென்சோ சோய் ஆகிய இரு விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேதியியலுக்கான நோபல் குழுவின் தலைவர் ஹெய்னர் லிங்கே கூறும்போது, “இந்த ஆண்டுக்கான பரிசு அடிப்படை வேதியியலுக்கானது. அமினோ அமிலங்கள் போன்ற சில மூலக்கூறுகள், ஒன்றுக்கொன்று கண்ணாடி பிம்பங்களாக இருக்கும் இரண்டு வகைகளாக உள்ளன. இருப்பினும், உயிரி மூலக்கூறுகள் இந்த கண்ணாடி பிம்பங்களில் ஒன்றை மட்டுமே கொண்டுள்ளன.
இதுபோன்ற வேதியியல் சமச்சீரின்மை எவ்வாறு தோன்றியிருக்கக்கூடும் என்பது வேதியியலாளர்களுக்கு நீண்ட காலமாக ஒரு புதிராகவே இருந்து வந்தது. நூற்றாண்டு பழமையான இந்தப் புதிருக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்ததற்காக ஹென்றி பி. காகன் மற்றும் கென்சோ சோய் ஆகியோருக்கு 2026-ம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு வழங்கப்படுகிறது” என்றார்.
புதிருக்கு தீர்வு கண்டது எப்படி?
விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு குறித்து ஹெய்னர் லிங்கே கூறியதாவது: நமது இடது மற்றும் வலது கைகளைப் போலவே, சில மூலக்கூறுகள் ஒன்றுக்கொன்று கண்ணாடி பிம்பங்களாக இருக்கும் இரண்டு வடிவங்களில் காணப்படுகின்றன. அவற்றில் ஒரே மாதிரியான அணுக்கள் ஒரே விதமாக இணைந்திருந்தாலும், அவற்றின் தன்மை வேறுபட்டவை. இந்த வேறுபாடு உயிரியலில் மிகவும் முக்கியமானதாக அமைகிறது.
புரதங்களின் கட்டுமானக் கூறுகளான அமினோ அமிலங்கள் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவை ஒன்றுக்கொன்று எதிரெதிரான இரண்டு வடிவங்களில் இருக்க முடியும். ஆனால் உயிரினங்கள் புரதங்களை உருவாக்க அவற்றுள் ஒன்றை மட்டுமே பெருமளவில் பயன்படுத்துகின்றன. இது, உயிர் எப்படி ஒரு மூலக்கூறு வடிவத்தை மற்றொன்றை விடத் தேர்ந்தெடுத்தது? என்கிற அடிப்படை கேள்வியை எழுப்புகிறது.
பல ஆண்டுகளாக, வேதியியலாளர்கள் இதற்கு விடையளிக்கப் போராடினர். இரண்டு கண்ணாடி பிம்ப வடிவங்களில் இருக்கக்கூடிய மூலக்கூறுகளை அவர்கள் உருவாக்க முயன்றபோது, வேதி வினைகள் பொதுவாக இரண்டு வடிவங்களையும் ஏறக்குறைய சம அளவில் உருவாக்கின. ஹென்றி பி. காகன், 1986-ல் ஒரு முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
வேதிவினைகள் எப்போதும் ஒரு முழுமையான சமநிலையில் நிகழ வேண்டியதில்லை என்பதை அவருடைய ஆய்வு காட்டியது. அதன்பிறகு கென்சோ சோய் 1995-ல், ஒரு மூலக்கூறின் ஒருபக்கச் சாய்வை பெருக்கும் ஆற்றல் கொண்ட ஒரு வேதிவினையை அறிவித்தார். அந்த வினையானது தன்வினையூக்கத்தை உள்ளடக்கியிருந்தது.
2003-ல், சாத்தியமான இரண்டு கண்ணாடி பிம்ப வடிவங்களில் அடிப்படையில் ஒன்றை மட்டுமே உருவாக்கும் ஒரு வினையை கென்சோ சோய் செய்து காட்டினார். இது ஒரு மைல்கல் சாதனையாகும், ஏனெனில் உயிரியல் அமைப்புகளைத் தவிர, வேறு எந்த விஞ்ஞானிகளாலும் இதற்கு முன்பு இத்தகைய உயர் அளவிலான வேதியியல் திசைச்சார்பை தன்னிச்சையாக அடைய முடிந்ததில்லை. இவ்வாறு அவர் கூறினார்.