வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தி மீது அமெரிக்கா முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ள டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க கடற்படையின் அனுமதியின்றி எந்த கப்பலும் உள்ளே நுழைய முடியாது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “தங்கள் தலைவர் யார் என்பதைக் கண்டறிவதில் ஈரான் மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறது. உண்மையில் அது அவர்களுக்குத் தெரியவில்லை. போர்க்களத்தில் படுமோசமாகத் தோற்றுக்கொண்டிருக்கும் கடும்போக்காளர்களுக்கும், மிதவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கும் இடையே பூசல் நிலவி வருகிறது. உண்மையில் இது பைத்தியக்காரத்தனமானது.
ஹார்முஸ் ஜலசந்தி மீது எங்களுக்கு முழுமையான கட்டுப்பாடு உள்ளது. அமெரிக்க கடற்படையின் அனுமதியின்றி எந்த கப்பலும் உள்ளே நுழையவோ வெளியேறவோ முடியாது. ஈரான் ஒரு உடன்பாட்டை எட்டும் வரை ஹார்முஸ் ஜலசந்தி இறுக்கமாகவே மூடப்பட்டிருக்கும்” என தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “ஹார்முஸ் ஜலசந்தியின் கடற்பரப்பில் கண்ணிவெடிகளை புதைக்கும் ஈரான் கடற்படை படகுகளை (அவர்களின் கடற்படைக் கப்பல்கள் அனைத்தும் அதாவது 159 கப்பல்களும் கடலுக்கு அடியில் உள்ளன. எனவே, வெளியே பணியில் ஈடுபடுவது படகுகளே) சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க கடற்படைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
இதில் எந்த தயக்கமும் காட்டக்கூடாது. மேலும், நமது கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள் தற்போது அந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தப் பணிகளை மூன்று மடங்கு அதிகமாக தொடர இதன்மூலம் நான் உத்தரவிடுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. இருந்தபோதிலும், ஈரானுக்கான கால அவகாசம் குறைவாகவே உள்ளது. உலகில் உள்ள அத்தனை நேரமும் எனக்கு இருக்கிறது. ஆனால் ஈரானுக்கு அப்படி அல்ல. அவர்களின் கடிகாரம் கெடுவுக்கு நெருக்கமாக ஓடிக்கொண்டிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
டொனால்டு ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு, அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் தொடுக்கும் என்பதையே உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.