பிரதமர் மோடி

 
உலகம்

“பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலைப்பாடு கூடாது” - ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி

வெற்றி மயிலோன்

பிஷ்கெக்: “பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இரட்டை நிலைப்பாடுகள் இருக்கக்கூடாது. நிதியுதவி, ஆள்சேர்ப்பு, தீவிரவாதமயமாக்கல் மற்றும் பாதுகாப்பான புகலிடங்கள் உள்ளிட்ட பயங்கரவாதத்தின் முழு கட்டமைப்பும் ஒழிக்கப்பட வேண்டும்” என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷ்கெக்​கில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) உச்சி மாநாடு நேற்று தொடங்​கியது. இதில் இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்​பிங் பங்​கேற்றனர்.

பிஷ்கெக்கில் நடைபெற்ற 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, “பயங்கரவாதம் மனிதகுலம் முழுவதற்கும் ஒரு பெரும் சவாலாக நீடிக்கிறது. இதற்கு எதிரான போராட்டம் என்பது வெறும் "நடவடிக்கை-எதிர்வினை" என்ற மனப்பான்மைக்குள்ளேயே நின்றுவிடக்கூடாது.

பயங்கரவாதத்திற்கான நிதியுதவி, ஆள்சேர்ப்பு, தீவிரவாதமயமாக்கல் மற்றும் பாதுகாப்பான புகலிடங்கள் என அதன் முழு கட்டமைப்பையும் நாம் தகர்க்க வேண்டும். இந்த முக்கியமான விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு இடமில்லை என்பதை நாம் அனைவரும் ஒரே குரலில் கூற வேண்டும்.

பயங்கரவாதத்தை தங்கள் கொள்கையின் ஒரு கருவியாகப் பயன்படுத்தும் மற்றும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலமும் ஆதரவும் அளிக்கும் நாடுகளுக்கு ஒரு வலுவான செய்தியை நாம் அனுப்ப வேண்டும். பயங்கரவாதம் யாருக்கும் ஒரு வியூகம் சார்ந்த சொத்தாக இருக்க முடியாது.

அமைதியான மற்றும் பாதுகாப்பான யூரேசியாவுக்கான நமது கூட்டு விருப்பம், ஆப்கானிஸ்தானின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையுடனும் தொடர்புடையது. ஆப்கானிஸ்தான் மக்களின் மேம்பாடு மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு இந்தியா தொடர்ந்து பங்களித்து வருகிறது, அதைத் தொடர்ந்து செய்யும்.

ஒரு பிராந்தியத்தில் ஏற்படும் மோதல் அங்கேயே நின்றுவிடுவதில்லை. அதன் தாக்கம் உலகம் முழுவதிலும் உள்ள எரிசக்தி பாதுகாப்பு, கடல்சார் வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றில் உணரப்படுகிறது. மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட நெருக்கடியை 'குளோபல் சவுத்' வளரும் நாடுகளே அதிகம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, அனைத்து பதற்றங்களுக்கும் போர்களுக்கும் தீர்வு போர்க்களத்தில் கிடைக்காது; மாறாக பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலமே சாத்தியமாகும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு.

இளம் தலைமுறைக்கும் பிராந்திய பாதுகாப்புக்கும் போதைப்பொருள் கடத்தல் ஒரு தீவிர அச்சுறுத்தலாக இருக்கிறது. பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், தகவல் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விவகாரங்களைக் கையாளும் வழிமுறைகளுக்கு நமக்குள் வலுவான ஒத்துழைப்பு தேவை” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT