உலகம்

இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி, விமானி ஸ்மித் மச்சாருக்கு அழைப்பு

வெற்றி மயிலோன்

டெல் அவிவ்: இஸ்ரேலில் நடைபெறவுள்ள சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது, ​​விழாவுக்கான சிறப்புச் சுடரை ஏற்றுமாறு இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.

துபாயிலிருந்து டெல் அவிவ் சென்ற ப்ளைதுபாய் விமானத்தின் விமானி அறையில் நடந்த தாக்குதலில் காயமடைந்த கேப்டன் ஸ்மித் மச்சாரிடம் தொலைபேசியில் நலம் விசாரித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்மித் மச்சார் ஆகியோரை இஸ்ரேலுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

சனிக்கிழமையன்று நடைபெற்ற உரையாடலின் போது, விமான தாக்குதல் சம்பவத்தின்போது மச்சார் செயல்பட்ட விதத்தைப் பாராட்டிய நெதன்யாகு, நடைபெறவுள்ள இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் மச்சாரும் மோடியும் இணைந்து தீபத்தை ஏற்ற வேண்டும் என்று தான் விரும்புவதாகக் கூறினார்.

மச்சாரிடம் பேசிய நெதன்யாகு, "நீங்கள் இஸ்ரேல், இந்தியா மற்றும் ஒட்டுமொத்த உலகிற்கும் ஒரு கதாநாயகன். இஸ்ரேலின் சிறந்த நண்பர்களான கேப்டன் ஸ்மித் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் சுதந்திர தின கொண்டாட்டத்தின் அடையாளமாகத் தீபத்தை ஏந்த வேண்டும் என்று விரும்புகிறேன். எங்கள் சுதந்திர தினத்தில் நாங்கள் அளிக்கும் மிக உயர்ந்த மரியாதை இதுவாகும்" என்று கூறினார்.

அதன்பிறகு, விமானத்தில் தாக்குதல் சம்பவம் எப்படி நடந்தது என்று நெதன்யாகு, மச்சாரிடம் கேட்டறிந்தார். பயணிகள் மற்றும் விமானக் குழுவினர் உள்ளே வருவதற்கு முன்பு விமானிகள் அறையில் என்ன நடந்தது என்பதை விமானி விவரித்தார். தாக்குதலின் போது விமானி மச்சார் செயல்பட்ட விதம் தன்னை மிகவும் ஈர்த்ததாகக் கூறிய நெதன்யாகு, விமானத்தில் இருந்தவர்களைப் பாதுகாக்க உதவியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், "உண்மையைச் சொல்லப்போனால், உங்கள் துணிச்சலையும், இக்கட்டான சூழலிலும் நீங்கள் வெளிப்படுத்திய நிதானமான முடிவெடுக்கும் திறனையும் கண்டு நான் வியக்கிறேன். நீங்கள் மிகுந்த துணிச்சலுடன் செயல்பட்டீர்கள்; பல உயிர்களைக் காப்பாற்றினீர்கள்.

தயவுசெய்து உங்கள் மனைவிக்கு என் வாழ்த்துகளைத் தெரிவியுங்கள். உங்களுக்கு ஒரு குடும்பம் இருப்பதையும், நீங்கள் உலகளாவிய குடும்பத்தின் ஒரு அங்கமாக இருப்பதையும் நான் அறிவேன். விரைவில் குணமடையுங்கள். நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி." எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது அபுதாபியில் மருத்துவச் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் மச்சார், சில நாட்களுக்கு முன்பு துபாயிலிருந்து டெல் அவிவ் சென்ற ப்ளைதுபாய் விமானத்தின் கட்டுப்பாட்டு அறையில் நடந்த தாக்குதலின்போது, ​​174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியிருந்தார்.

SCROLL FOR NEXT