வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தின் நுவாகோட் பகுதி

 
உலகம்

நேபாளத்துக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: திபெத்தில் அணை உடைந்துவிட்டதாக தகவல்

மோகன் கணபதி

காத்மாண்டு: நேபாளத்தை ஒட்டிய திபெத் பகுதியில் அணை ஒன்று உடைந்துவிட்டதாக வெளியான தகவலை அடுத்து, மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக நேபாள காவல்துறை எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக நேபாள காவல்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், “திபெத் பகுதியில் உள்ள ஓர் அணை உடைந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, பாதுகாப்புப் படையினர், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள், பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும், உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், மற்றவர்களுக்கும் தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், நேபாளத்தின் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையமும் போட்டே கோஷி, திரிசூலி, நாராயணி ஆகிய ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதனால் ஆற்றின் கீழ் பகுதிகளில் மீண்டும் ஒரு பேரழிவு வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

நேபாளத்தின் ரசுவா, நுவாகோட் ஆகிய மாவட்டங்களுக்கு உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கீழ் பகுதிகளில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தீவிர வெள்ள அபாயத்தைக் கருத்தில் கொண்டு, நுவாகோட் மாவட்டத் தலைமையகமான பிதுர் மற்றும் திரிசூலி பஜார் ஆகிய பகுதிகளில் ஏற்கனவே சேதமடைந்த இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த புல்டோசர்கள், மீட்பு உபகரணங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அங்கு பணியில் இருந்த மீட்புக் குழுவினரும் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், நேபாள - சீன எல்லை சாலைகள், ஆற்றங்கரையோரம் உள்ள சாலைகளில் போக்குவரத்தை பாதுகாப்புப் படையினர் முழுமையாக நிறுத்தியுள்ளனர்.

திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நீடிப்பதால், ரசுவா, நுவாகோட், தடிங், கோர்கா, சித்வான் மற்றும் நவல்பாராசி ஆகிய மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களும், தேடுதல் - மீட்புக் குழுவினரும் வெளியேறத் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 26 அன்று திபெத் எல்லைக்கு அருகில் ஏற்பட்ட மிகப்பெரிய பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து, ஆற்றுப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்த திடீர் வெள்ளத்தில் 470-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். அந்தப் பேரழிவின் பாதிப்புகளிலிருந்து நேபாளம் இன்னும் மீண்டு வராத நிலையில் இந்த எச்சரிக்கை மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால், அடுத்த அறிவிப்பு வரும் வரை மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், ஆற்றுப் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பிற வழிகளில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT