காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ள சேதத்தில் சிக்கி 213 இந்தியர்கள் உட்பட 5 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக அறிவிக்க அந்நாடு முடிவு செய்துள்ளது.
நேபாள நாட்டிலுள்ள திபெத் - நேபாள எல்லையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி பெரும் பனிப்பாறை சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்குள்ள போடே கோஷி நதியில் பெருவெள்ளம் ஏற்பட்டு, ரசுவா, நுவாகோட், சித்வன் உள்ளிட்ட மாவட்டங்களைப் புரட்டிப் போட்டது. நேபாள நாடு இதுவரை கண்டிராத வகையில் மிகப்பெரிய அளவில் அங்கு சேதம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் காணாமல் போன நிலையில், 1,300-க்கும் அதிகமானோரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்தன. இன்னும், 5,000-க்கும் அதிகமானோர் காணாமல் போனவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், இந்தியாவிலிருந்து நேபாளத்துக்குச் சுற்றுலா சென்ற 213 பேரின் நிலை இதுவரை தெரியவில்லை. இதனிடையே, பெருவெள்ளம் ஏற்பட்டு 3 மாதங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், காணாமல் போனவர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டு, உயிரிழந்தவர்களாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டின் தேசிய பேரிடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் நேற்று தொடங்கியுள்ளது.
213 இந்தியர்கள் உட்பட 5 ஆயிரம் பேர் பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்ததாக அறிவிக்க அந்நாடு முடிவு செய்துள்ளது. நேபாள அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் 213 இந்தியர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்த பட்டியலில் உள்ள விவரங்களில் ஏதேனும் தகவல் சேர்த்தல், நீக்கல் அல்லது திருத்தங்கள் இருப்பின், வரும் டிசம்பர் 2-ம் தேதிக்கு முன்னதாக உறவினர்கள் தங்களது ஆட்சேபங்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக நேபாளத்திலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக eoikathmandufloodsupport@gmail.com என்ற இ-மெயில் முகவரியையோ அல்லது +9779851316807 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்ததாக அறிவிக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் இறப்புச் சான்றிதழ்களை சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களிடம் நேபாள அரசு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.