உலகம்

நேபாள வெள்ளப்பெருக்கு உயிரிழப்பு 469 ஆக அதிகரிப்பு: 667 சுற்றுலாப் பயணிகளை தேடும் பணி தீவிரம்

மோகன் கணபதி

காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் காவல்துறை அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 50 வெளிநாட்டினர் உட்பட 796 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது.

சீனாவின் திபெத்தை ஒட்டிய நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போட்டேகோஷி ஆற்றில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக அப்பகுதியில் இருந்த வீடுகள், கடைகள், விடுதிகள், அரசு கட்டிடங்கள், பாலங்கள் என பல்வேறு கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி ஓடியபோதிலும், சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். வீடுகளுக்குள் இருந்தவர்களும் வீட்டோடு அடித்துச் செல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தை அடுத்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களைத் தேடும் பணியில் அந்நாட்டு காவல்துறை, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்தவர்கள், காணாமல் போனவர்கள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை நேபாள காவல்துறை தொடர்ந்து புதுப்பித்து வெளியிட்டு வருகிறது.

நேபாள காவல்துறை இன்று வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, “காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் 4,348 காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளது. ரசுவா, நுவாகோட், தாடிங், சித்வான், கோர்க்கா உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 50 வெளிநாட்டினர் உட்பட 796 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 796 பேர் தரை மார்க்கமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள நாட்டைச் சேர்ந்த 127 சுற்றுலாப் பயணிகள் உட்பட 667 சுற்றுலாப் பயணிகளை இன்னும் காணவில்லை என்று அந்நாட்டின் சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேபாளத்தின் 127 சுற்றுலாப் பயணிகள் உட்பட 667 சுற்றுலாப் பயணிகளின் நிலை குறித்து தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக 31 சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டனர். இந்தியா - 1, தென் கொரியா - 4, அமெரிக்கா - 2, ரஷ்யா - 2, இத்தாலி - 2, பல்கேரியா - 1, சுவிட்சர்லாந்து - 1 ஆகியோர் மீட்கப்பட்டுள்ளனர்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகளுக்கு வெளிநாடுகளின் உதவி தேவையில்லை என்று நேபாள வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பகதூர் சேத்ரி கூறுகையில், “இதுபோன்ற தருணங்களில் உதவ முன்வருவது இயல்பானதே. எங்கள் பாதுகாப்பு அமைப்புகள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போதைக்கு எங்களுக்கு உதவி தேவையில்லை” என தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமானச் சூழலை மதிப்பிடவும், இடம்பெயர்ந்த மக்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்கவும் யுனிசெஃப் பிரதிநிதிகள் நேபாளத்தின் நுவாகோட்டுக்கு வந்துள்ளனர். “நாங்கள் நிலைமையை மதிப்பிட்டு வருகிறோம். நாங்கள் நேபாள அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம்” என்று யுனிசெஃப் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு இங்கிலாந்து 5 மில்லியன் பவுண்டுகள் நிதி உதவியை அளிக்க முன்வந்துள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 33 பேர் காணாமல் போன நிலையில், இந்த நிதி உதவியையும் அவசரகால மீட்புக் குழுவினரையும் வழங்க இங்கிலாந்து முன்வந்துள்ளது.

SCROLL FOR NEXT