உலகம்

டி-ஷர்ட்டை அசைத்து கவனத்தை ஈர்த்து பறந்து கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டரில் ஏறி உயிர் தப்பிய சிறுவன்

செய்திப்பிரிவு

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின்போது, வீட்டின் கூரையில் சிக்கிய சிறுவன் ஒருவன், தனது டி-ஷர்ட்டை கழற்றி வானத்தை நோக்கி அசைத்து கவனத்தை ஈர்த்து ஹெலிகாப்டரில் ஏறி தப்பிச் சென்ற வீடியோ வைரலாகியுள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில், அங்கு வசிக்கும் சிறுவன் ஒருவன் தனது வீட்டை சுற்றி வெள்ள நீர் சூழ்ந்ததால் அங்கிருந்து அவனால் தப்பி செல்ல முடியவில்லை. இதையடுத்து, அந்த சிறுவன் சமயோசிதமாக செயல்பட்டு, வீட்டின் கூரை மீது தனியாக ஏறிச் சென்றான்.

அப்போது, அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த அந்நாட்டு ராணுவ ஹெலிகாப்டரின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவன் தனது டி-ஷர்ட்டை கழற்றி வானத்தை நோக்கி அசைத்துக் கொண்டிருந்தான். தனது இருப்பிடத்தைத் தெரிவிக்க அவனிடம் இருந்த ஒரே சமிக்ஞையாக அது இருந்தது.

சிறிது நேரத்தில் நேபாள ராணுவ ஹெலிகாப்டர் அந்த வீட் டின் அருகே வந்து கூரைக்கு மேலே பறந்தபடி நின்றது. ஹெலிகாப்டர் நெருங்கியதும், சிறுவன் அதை கட்டிடத்தின் ஓரத்தை நோக்கி வருமாறு சைகை காட்டினான்.

முதலில் ஹெலிகாப்டரின் தரையிறங்கும் தாங்குக் கம்பியை சிறுவன் பிடித்துக் கொண்டான். பின்னர், ஹெலிகாப்டரில் அமர்ந்திருந்த ராணுவ வீரரின் கையைப் பிடிக்க முயன்றான். பின்னர், ராணுவ வீரரின் உதவியுடன் சிறுவன் பத்திரமாக ஹெலிகாப்டரில் ஏறினான். இதுதொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.

SCROLL FOR NEXT