வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உடல்நிலை பற்றி பல்வேறு விவாதங்களும் எழுந்துவரும் நிலையில். ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகைக்கு அதிபர் ட்ரம்ப் அளித்துள்ள பேட்டியில் தனது உடல்நிலை பற்றி தெளிவுபடுத்தியுள்ளார்.
முன்னதாக, ட்ரம்ப்பின் வலது கையில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அதை மறைக்க அவரது கையில் மேக் - அப் பூசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி அது குறித்த விவாதங்களும் எழுந்தன. அண்மையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, ட்ரம்ப் வரவேற்றபோது வெளியான புகைப்படங்களில் ட்ரம்ப்பின் வலது கையில் வெள்ளை நிற பேட்ச் , ஏற்கெனவே இருந்த விவாதங்களுக்கு மேலும் தீனி போட்டது. ட்ரம்ப்புக்கு இப்போது 79 வயது. அவர் பதவிக்காலத்தை முடிக்கும்போது 82 வயதாகும். முந்தைய அதிபர் ஜோ பைடன் தான் அமெரிக்க அதிபர் வரலாற்றிலேயே அதிக வயது கொண்ட நபராக இருந்த நிலையில், அந்தச் சாதனையை ட்ரம்ப் முறியடிக்கக்கூடும்.
ட்ரம்ப்பின் வலது கையில் உள்ள காயம்
இந்நிலையில் ட்ரம்ப் அளித்த தொலைபேசி பேட்டி வருமாறு: என உடல்நிலை சீராக உள்ளது. நான் தினமும் 325 மில்லி கிராம் அளவிலான ஆஸ்பிரின் மாத்திரையை உட்கொள்கிறேன். சிலர் அது அதிகம் என்கிறார்கள். நான் மருத்துவர் பரிந்துரையின்படியே அதனை எடுக்கிறேன். அதை எடுக்காவிட்டால் ரத்தம் அடர்த்தி மிகுமாம். எனக்கு எனது இதயத்துக்குள் நல்ல மெலிதான ரத்தமே செல்ல வேண்டும் என விரும்புகிறேன். அதனால் ஆஸ்பிரின் எடுக்கிறேன். நான் நீண்ட கால பழக்கங்களைக் கைவிட விரும்பவதில்லை. எனக்கு கொஞ்சம் மூடநம்பிக்கை அதிகம்.
அப்புறம் எனக்கு இந்த ட்ரெட் மில்லில் மணிக் கணக்கில் நடப்பது எல்லாம் பிடிக்காது. எனக்கு உடற்பயிற்சிகளில் எல்லாம் ஈடுபாடு இல்லை.
நான் செய்யும் ஒரே ஒரு உடற்பயிற்சி கோல்ஃப் விளையாடுவது தான். அதுவும் நான் வார நாட்களில் விளையாடுவது இல்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நான் ஒரு ஸ்கேன் எடுத்துக் கொண்டேன். அதுவும் கூட எல்லோரும் சொல்வது போல் எம்ஆர்ஐ ஸ்கேன் அல்ல வெறும் சிடி ஸ்கேன் தான். அது வழக்கமான உடல்நிலை பரிசோதனைக்கானது.
நான் ஆஸ்பிரின் அதிகம் எடுப்பதால் உடலில் எங்காவது எப்போதாவது சில சிராய்ப்புகள் போல் காட்சியளிக்கலாம். அதை மறைக்க மேக் அப் போடப்படுவதாகச் சொல்கிறார்கள். ஆம், நான் என்னுடன் மேக் அப் கிட் எடுத்துச் செல்கிறேன். அது வெறும் 10 நொடிகளில் சிறப்பான ஒப்பனையை தரக் கூடியது.
கண்களை மூடிய நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
மேலும், நான் நீண்ட நேரம் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் தூங்கிவிடுவதாக எனது புகைப்படத்தைப் பகிர்ந்து விமர்சிக்கின்றனர். ஆனால் நான் தூங்கவில்லை. நான் கண் சிமிட்டும் நேரம் படம் எடுத்து நான் தூங்குவதாக சொல்கின்றனர். நான் இரவில் கூட வெகு நேரம் தூங்குவதில்லை.
வயது மூப்பு காரணமாக எனக்கு கால் வலி இருந்தது. அதை சிவிஐ ( chronic venous insufficiency ) என்றனர். அதற்காக கம்ப்ரஸன் சாக்ஸ் அணியும்படி டாக்டர் அறிவுறுத்தினார். ஆனால் அந்த சாக்ஸ் எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் அதை அணிவதை விட்டுவிட்டேன். இப்போதெல்லாம் நான் மணிக்கணக்கில் டெஸ்க்கில் அமராமல் அடிக்கடி எழுந்து நடக்கிறேன். அதுவே என் கல் வீக்கப் பிரச்சினையில் நல்ல தீர்வை தந்துள்ளது.” என்றார்.
இதற்கிடையில், ட்ரம்ப் எடுத்துக் கொண்ட ஸ்கேன் பற்றி அவருக்கு சிகிச்சை அளிக்கும் அமெரிக்க கடற்படை கேப்டன் மருத்துவர் சீன் பார்பெல்லா வெளியிட்ட அறிக்கையில், “ட்ரம்ப்புக்கு அண்மையில் எடுக்கப்பட்டது சிடி ஸ்கேன். அது அவருக்கு இதய ரத்த நாள பாதிப்பு ஏதும் உள்ளதா என்பதைக் கண்டறிய எடுக்கப்பட்டது. ட்ரம்ப் உடல்நிலை மிக நன்றாக உள்ளது.” என்று குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
மேலும், தனது உடல்நிலை குறித்து ட்ரம்ப் வெளிப்படையாக ஊடகங்களுக்குப் பேசியுள்ளது அவரது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது.