நாட்டின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ்-க்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த அதிபர் முகமது ஷஹாபுதின் | கோப்புப் படம்
டாக்கா: வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ் நாட்டின் அரசியலமைப்பைப் பின்பற்றவில்லை என்றும், தனக்கு எதிராக சதிச் செயலில் ஈடுபட்டதாகவும் அந்நாட்டின் அதிபர் முகமது ஷஹாபுதின் குற்றம் சாட்டியுள்ளார்.
வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி வெற்றி பெற்று தாரிக் ரஹ்மான் பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில், முன்னாள் ஆட்சியாளரான முகமது யூனுஸ் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை அதிபர் முகமது ஷஹாபுதின் முன்வைத்துள்ளார்.
அதிபர் மாளிகையில், வங்காள நாளிதழான காலர் காந்தோவுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘‘முகமது யூனுஸ் தலைமையிலான அந்த ஒன்றரை ஆண்டுகளில், நான் எந்த விவாதத்திலும் ஈடுபடவில்லை. எனக்கு எதிராக இன்னமும்கூட சதிகள் தீட்டப்படுகின்றன. நாட்டின் அமைதியையும் ஒழுங்கையும் நிரந்தரமாக அழித்து அரசியலமைப்பு வெற்றிடத்தை உருவாக்க பல முயற்சிகள் நடந்தன.
அரசியலமைப்பின் எந்த விதியையும் முகமது யூனுஸ் பின்பற்றவில்லை. அவர் வெளிநாட்டுக்குச் செல்லும்போது எனக்குத் தெரிவிக்க வேண்டும். திரும்பிய பின் அதன் விளைவுகள் குறித்து எழுத்துப்பூர்வமாக எனக்குத் தெரிவிக்க வேண்டும். அவர் 14 முதல் 15 முறை வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். ஆனால் ஒருமுறைகூட எனக்குத் தெரிவிக்கவில்லை. அவர் என்னைப் பார்க்க வரவில்லை.
ஒன்றரை ஆண்டுகளாக நான் ஓர் அரண்மனைக் கைதியாக மாற்றப்பட்டேன். கொசோவா மற்றும் கத்தார் நாடுகளுக்கு நான் மேற்கொள்ள இருந்த பயணத்தை யூனுஸ் நிர்வாகம் தடுத்தது. யூனுஸ் அரசாங்கம் 133 அவசரச் சட்டங்களை கொண்டுவந்தது. இதில், ஒரு சில சட்டங்கள் சூழ்நிலை காரணமாக அவசியமாக இருந்திருக்கலாம். ஆனால், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் அவசரச் சட்டங்களைப் பிறப்பிக்க எந்த நியாயமான காரணங்களும் இல்லை.
ஒரு கட்டத்தில் அரசியலமைப்புக்கு முரணான வழியில் எனது இடத்தில், முன்னாள் தலைமை நீதிபதியை அமர்த்த சதி செய்யப்பட்டது. ஆனால், அரசியலமைப்பு கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி ஒரு நீதிபதி அந்த திட்டத்தை தடுத்தார்.
2024, அக்டோபர் 22 அன்று அதிபர் மாளிகைக்கு வெளியே நடந்த போராட்டங்கள் பயங்கரமானவை. அதிபர் மாளிகையை சூறையாட கும்பல்கள் அணிதிரட்டப்பட்டன. இறுதியில், ராணுவத்தின் நடவடிக்கை காரணமாக நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
ராணுவமும் வங்கதேச தேசியவாத கட்சியின் தலைமையும் அரசியலமைப்பு தொடர்ந்து பராமரிக்கப்பட எனக்கு உதவின. முப்படைகளின் தலைவர்களும், ‘நீங்கள் ஆயுதப்படைகளின் உச்ச தளபதி. உங்கள் தோல்வி என்பது முழு ஆயுதப்படைகளின் தோல்வியைாகக் கருதப்படும். இது நிகழக்கூடாது. எந்த விலை கொடுத்தாவது நாங்கள் தடுப்போம்’ என்றார்கள்’’ என தெரிவித்துள்ளார்.