உலகம்

இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: ட்ரம்ப் நிர்வாகம் செய்த முக்கிய திருத்தம் என்ன?

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: இந்​தியா - அமெரிக்கா இடையி​லான வர்த்தக ஒப்பந்​தத்​தில் அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் முக்கிய திருத்தங்களை செய்துள்ளது.

இந்​தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% இறக்​குமதி வரி விதித்திருந்​தது. இந்நிலையில், இரு நாடுகளுக்கிடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் சுமுக உடன் பாடு எட்டப்பட்டுள்ளதால், இந்​தியா மீதான வரி 18 சதவீத​மாக குறைக்​கப்​படு​வ​தாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் அறி​வித்​தார். அப்​போது அமெரிக்கா​விடம் இருந்து 500 பில்​லியன் டாலர் அளவுக்கு பொருட்களை வாங்க இந்​தியா உறுதி அளித்​துள்​ள​தாக தெரிவிக்கப்​பட்​டது. ஒப்​பந்த விவரங்​கள் கடந்த திங்​கள் கிழமை வெளி​யா​யின. அது பல குழப்​பங்​களை ஏற்​படுத்​தி​யது.

          

இந்​தி​யாவை அமெரிக்​கா​விடம் மோடி அரசு விற்​று​விட்​ட​தாக எதிர்க்​கட்​சிகள் குற்​றம் சுமத்​தின. ஆனால் 24 மணி நேரத்​தில் அந்த ஒப்​பந்​தத்​தில் இடம்​பெற்ற சில அம்​சங்​களை அமெரிக்கா திருத்தி உள்ளது. இரு நாடு​கள் இடையே​யான வர்த்தக ஒப்பந்தத்தில் கூடு​தல் சலுகைகள் இடம் பெறலாம் என கூறப்படுகிறது. இந்​தி​யா​வின் வேண்​டு​கோள் படி சில முக்​கிய மாற்​றங்​களை வர்த்தக ஒப்​பந்​தத்​தில் செய்து வரு​வ​தாக வெள்ளை மாளிகை தெரி​வித்​துள்​ளது. அனைத்து அம்​சங்​களும் இறுதி செய்​யப்​பட்​டபின்பு இந்த ஒப்​பந்​தம் மார்ச் மாதம் மத்​தி​யில் கையெழுத்​தாகும் எனத் தெரி​கிறது.

மாற்​றங்​கள் என்ன?: பருப்பு உற்​பத்​தி​யில் இந்​தியா உலகள​வில் பெரிய நாடாக உள்​ளது. உலகளா​விய பருப்பு உற்​பத்​தி​யில் இந்தியா 25 முதல் 28 சதவீத இடத்தை பெற்​றுள்​ளது. ஆனால் அமெரிக்க பருப்​பு​கள் மீது இந்​தியா விதிக்​கும் 30 சதவீத இறக்குமதி வரியை நீக்க வற்​புறுத்த வேண்​டும் என்று அதிபர் ட்ரம்ப் நிர்​வாகத்​துக்கு அமெரிக்க செனட் உறுப்​பினர்​கள் கடிதம் எழு​தி​யிருந்​தனர்.

அமெரிக்கா முதலில் வெளி​யிட்ட வர்த்தக ஒப்​பந்த விவரத்​தில் பருப்​பு​கள் மற்றும் அமெரிக்க வேளாண் பொருட்​கள் பற்றி குறிப்பிட்​டிருந்​தது. ஆனால் அமெரிக்கா மாற்​றியமைத்து வெளியிட்ட வர்த்தக ஒப்​பந்​தத்​தில் பருப்​பு​கள் பற்றி எது​வும் குறிப்பிடப்​பட​வில்​லை.

அமெரிக்​கா​விடம் இருந்து 5 ஆண்​டு​களில் 500 பில்​லியன் டாலர் அளவி​லான எரிசக்தி பொருட்​கள், தகவல் தொடர்பு தொழில்​நுட்ப பொருட்​கள், வேளாண் பொருட்​கள், நிலக்​கரி மற்​றும் சேவைகளை பெற இந்​தியா உறுதி அளித்​துள்​ள​தாக முதலில் வெளி​யிடப்​பட்ட ஒப்​பந்​தத்​தில் அமெரிக்கா கூறி​யிருந்​தது. ஆனால் மாற்​றி அமைக்​கப்​பட்ட ஒப்​பந்​தத்​தில் வேளாண் பொருட்கள் நீக்​கப்​பட்​டுள்​ளன. உறுதி அளித்​துள்​ளது என்ற வார்த்தைக்கு பதிலாக உத்​தேசித்​துள்​ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT