உலகம்

அமெரிக்க போர் விமானங்களை தவறுதலாக சுட்டு வீழ்த்திய குவைத் படை!

செய்திப்பிரிவு

குவைத்தின் வான் பாதுகாப்புப் படையினரால், அமெரிக்காவின் மூன்று ‘எஃப்-15 இ ஸ்ட்ரைக் ஈகிள்’ போர் விமானங்கள், தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை மையமான சென்ட்காம் (CENTCOM) தெரிவித்துள்ளது.

ஈரான் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டி அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த சனிக்கிழமை தாக்குதலை தொடங்கின. ஈரானில் இதுவரை 550-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில், மறுபுறம் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இராக், கத்தார், குவைத், ஜோர்டான், பஹ்ரைன், சிரியா ஆகிய நாடுகளில் செயல்படும் அமெரிக்காவின் 27 ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் தொடர்ந்து ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

          

இந்நிலையில், அமெரிக்க மத்திய கட்டளை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நட்புப் படைத் தாக்குதல்’ சம்பவத்தில், குவைத் படைகளால் தவறுதலாக 3 அமெரிக்க போர் விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டன. இந்த மூன்று விமானங்களிலும் இருந்த தலா இருவர் என மொத்தம் 6 விமானிகளும் பத்திரமாக பாராசூட் மூலம் குதித்து வெளியேறினர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, தற்போது நலமுடன் உள்ளனர்.

இந்தச் சம்பவத்தை குவைத் ஒப்புக் கொண்டுள்ளது. மீட்பு நடவடிக்கையில் குவைத் பாதுகாப்புப் படையினர் ஆற்றிய முயற்சிக்கும், தற்போதைய போரில் அளித்து வரும் உறுதுணைக்கும் நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நொறுங்கிய எஃப்-15 போர் விமானம்:

அதேநேரத்தில், குவைத்தில் எஃப்-15 அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்தது. அந்தப் போர் விமானம், பின்பகுதியில் தீப்பிடித்தபடி சுழன்று கொண்டே கீழே விழும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. குவைத் வான்வெளியில் பறந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அப்போது, விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாராசூட் மூலம் குதித்து பாதுகாப்பாக வெளியேறியது காணொலி காட்சியில் பதிவாகியுள்ளது.

ஓமனில் இந்தியர் ஒருவர் உயிரிழப்பு:

இதனிடையே, ஓமன் வளைகுடாவில் மார்ஷல் தீவுகள் கொடி ஏற்றப்பட்ட எண்ணெய் கப்பல் மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட ட்ரோன் படகு மோதியதில் கப்பலில் இருந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். ஓமன் நியூஸ் ஏஜென்சி வெளியிட்டுள்ள தகவலில், மஸ்கட் கடற்கரைக்கு அருகில் இந்த தாக்குதல் நடைபெற்றது. இதில் உயிரிழந்தவர் இந்தியர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT