அயத்துல்லா அலி காமேனியின் மகன் மோஜ்தபா காமேனி
டெஹ்ரான்: மறைந்த அயத்துல்லா அலி காமேனியின் மகன் மோஜ்தபா காமேனி (56) ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் மதகுருவும், உச்ச தலைவருமான அயத்துல்லா அலி காமேனி உள்பட 40-க்கும் மேற்பட்ட தலைவர்கள் உயிரிழந்தனர். காமேனியின் மனைவி, மகள், மருமகன், பேத்தி உள்ளிட்டோரும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இடைக்கால உச்ச தலைவராக அலிரேசா அராஃபி கடந்த சில நாள்களுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்டார்.
இதனிடையே, 88 ஷியா மத குருமார்களைக் கொண்ட நிபுணர்கள் குழு, புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியிலும் இறங்கியது.
இந்நிலையில், ஈரானின் புதிய உச்சத் தலைவராக மறைந்த காமேனியின் 2வது மகன் மோஜ்தபா ஹொசைனி காமேனி, ஈரான் நிபுணர்கள் சபையால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காமேனியின் நீண்ட கால வாரிசாக கருதப்பட்ட மோஜ்தபா, ஈரானின் முழுக் கட்டுப்பாட்டையும் ஏற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வாரிசு அரசியலை நீண்ட காலமாக எதிர்த்து வரும் ஈரான் அரசு, தந்தைக்குப் பின்னர் மகனைத் தேர்வு செய்திருப்பது அரசின் கொள்கை குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
கடந்த 27 ஆண்டுகளாக திரைக்குப் பின்னால் அரசியலில் முக்கிய பங்காற்றி வந்த மோஜ்தபா, தற்போது நேரடியாக அதிகாரப் பொறுப்பை ஏற்று ஈரானை வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தலைவரையும் கொல்வோம்: இஸ்ரேல்
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இஸ்ரேலை அழிக்கவும், அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளை அச்சுறுத்தவும், ஈரானிய மக்களை ஒடுக்கவும் நினைக்கும் ஈரானிய தீவிரவாத ஆட்சியால் நியமிக்கப்பட்ட எந்தவொரு தலைவரும், கொல்வதற்கான இலக்காக இருப்பார்.
அவரது பெயர் என்ன, அவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது முக்கியமல்ல. புதிய உச்ச தலைவராக யார் தேர்வு செய்யப்பட்டாலும், அவரையும் குறிவைப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.