“காமேனியால் பாதிக்கப்பட்ட ஈரானியர்களின் எண்ண ஓட்டம், அவரது படுகொலைச் செய்தியைக் கேட்டதும் எப்படி இருந்தது என்பதை ஈரானுக்கு வெளியில் இருப்பவர்களால் புரிந்துகொள்ள முடியாது.”
“இராக்கில் என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியும். அதேபோன்ற குழப்பங்கள் இங்கேயும் நடக்க வேண்டாம்; இங்கு ரத்தம் ஓட வேண்டாம். எனக்கு இஸ்லாமிய குடியரசு போதும்.”
- இவை ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியின் படுகொலைக்கு அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் முன்வைத்துள்ள மாறுபட்ட கருத்துகள்.
அண்மையில் வெனிசுலா அதிபரைக் கைது அமெரிக்கா செய்தபோது, இதே மாதிரியான கொண்டாட்டமும் கவலையும் என எதிரெதிர் மனநிலை அந்நாட்டு மக்கள் மத்தியில் தென்பட்டது.
இப்போது, அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய கூட்டு ராணுவத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்ட நிலையிலும், ஈரானிலும், வெளிநாடு வாழ் ஈரானியர்கள் மத்தியிலும் கலவையான எதிர்வினைகளைக் காண முடிகிறது.
ஒருபுறம் காமேனி படுகொலையால் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதாக சிலர், குறிப்பாகப் பெண்கள் ஆனந்தக் கண்ணீர் சிந்துகின்றனர். இன்னொரு புறம், “உச்ச தலைவர் கமேனி படுகொலையுடன் எல்லாம் முடிந்துவிடவில்லை” என்ற எச்சரிக்கையுடன் துக்கத்தை அனுசரிக்கின்றனர்.
இந்தப் பின்னணியில் காமேனியின் பின்புலத்தினையும், அமெரிக்கா - இஸ்ரேலின் தாக்குதல் எதை நோக்கிச் செல்லக்கூடும் என்ற கணிப்புகளையும் சற்று தெளிவாகப் பார்ப்போம்.
காமேனியின் முகங்கள்:
காமேனி 1939-ம் ஆண்டு பிறந்தவர். 1960 முதல் 70 வரை ஈரானில் இருந்த ஆட்சியை திரைமறைவில் இருந்து அமெரிக்கா இயக்கிக் கொண்டிருந்த காலத்தில் அயதுல்லா காமேனி, ஈரான் மேற்கத்திய கலாச்சார மயமாக்கலுக்கு உள்ளாவதற்கு எதிராக போராடும் குழுக்களுடன் இணைந்து தீவிரமாகப் போராடிக் கைதானவர்.
1979-ல் ஷா ஆட்சி அதிகாரம் தூக்கி வீசப்பட்டு, ஈரான் ஓர் இஸ்லாமிய குடியரசு ஆனபோது இஸ்லாமிய புரட்சிகர கவுன்சிலின் உறுப்பினரானவர் காமேனி. 1982-ல் ஈரான் அதிபரானார் காமேனி. 1989-ல் ஈரானின் உச்ச தலைவரானார். அன்று தொட்டு தன் கடைசி நாள் வரை அவர்தான் ஈரானின் உச்ச தலைவராக இருந்தார்.
காமேனி, ஈரானில் இஸ்லாமிய சட்டத்தின்படியே ஆட்சி நடக்க வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருந்தார். நீகா ஷாகராமி, சரினா இஸ்மாயில்ஸதே, மாஷா அமினி இந்த மூன்று பெண்களையும், 2022-ல் அவர்களுக்கு நடந்த துயரத்தையும் ஈரான் மட்டுமல்ல, காமேனி எதிர்ப்பாளர்கள் மட்டுமல்ல, உலகமே மறந்திருக்க முடியாது. ஹிஜாப் அணிவது, அதை முறைப்படி அணிவது கட்டாயம் என்று ஈரானிய அரசு காட்டிய கெடுபிடிக்கு அந்த மூன்று இளம் பெண்களின் உயிர் பறிபோனது.
அதன் பின்னர் பெண்கள், வாழ்க்கை, சுதந்திரம் (Women, Life, Freedom) என்ற தலைப்பில் 2022-ல் ஈரானில் பிரம்மாண்ட புரட்சி வெடித்தது. அதில் பெண்களும், அவர்களுக்கு ஆதரவாக இளைஞர்களும் லட்சக்கணக்கில் களமிறங்கினர். அவர்களை கொத்துக் கொத்தாக கைது செய்த ஈரான் அரசு, மரண தண்டனைகளையும் நிறைவேற்றியது. சிறைகள் நிரம்பின. ஆனால், போராட்டங்கள் ஓயவில்லை.
அதன் தொடர்ச்சியாக, ஈரான் அரசு இறங்கிவந்தது. போராட்டக்காரர்களை விடுவிக்கத் தொடங்கியது, நாடாளுமன்றத்தில் ஹிஜாப் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்ற உறுதிகளோடு போராட்டங்கள் அடங்கிப் போயின.
போராட்டங்கள்தான் ஓய்ந்தனவே தவிர, பெருவாரி மக்கள் மத்தியில் காமேனி மீதான வெறுப்பு ஒன்றும் அணைந்துவிடவில்லை. இதற்கிடையில் பணவீக்கம், விலைவாசி உயர்வு, நாணய மதிப்பு சரிவு, வேலைவாய்ப்பின்மை ஆகிய பிரச்சினைகள் எழ. அவற்றை முன்வைத்து கடந்த டிசம்பர் இறுதியில் ஈரானில் போராட்டம் வெடித்தது.
பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தோடு ஈரானின் உச்ச தலைவர் அயோதுல்லா அலி காமேனிக்கு எதிராகவும் அதிருப்தி அலைகள் வலுத்தன. புரட்சிகர இஸ்லாமியப் படைகள் மூலம் போராட்டக்காரர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். ஈரான் மக்கள் மத்தியில் ஆட்சி மாற்றத்துக்கான வேட்கை எரிய, அதில் எண்ணெய் ஊற்றுவதுபோல் அமெரிக்கா ஆதரவுக் குரல்களை எழுப்பியது.
‘ஈரானின் அப்பாவி மக்களுக்கு ஏதேனும் நேர்ந்தால், நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்’ என்று ‘பாசம்’ காட்டியது அமெரிக்கா. இந்தச் சூழலில்தான், ஈரான் அணுசக்தி ஏவுகணையை தயாரிக்கிறது என்ற குற்றச்சாட்டை மீண்டும் தூசி தட்டிய அமெரிக்கா, போர் நடத்துவோம் என்று எச்சரித்தது.
அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. ‘சரணடையுங்கள்... இல்லை மரணம் நிச்சயம்’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆக்ரோஷம் காட்ட, அதற்கு சற்றும் குறையாத ஆக்ரோஷத்தை பதிலடியாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறது ஈரான்.
இதற்கிடையே, அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதற்கு ஈரானிலும், வெளிநாடு வாழ் ஈரானியர்கள் மத்தியிலும் கலவையான எதிர்வினைகளைக் காண முடிகிறது.
பெண்களின் குரல்...
ஈரானைச் சேர்ந்த 24 வயது பெண் ஊடகவியலாளர் ஒருவர், “எனது தெரு, மக்களால் நிரம்பியிருந்தது. எனது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. இந்தக் கொலைகாரரால் பாதிக்கப்பட்ட ஈரானியர்களின் எண்ண ஓட்டம், அவரது படுகொலைச் செய்தியைக் கேட்டதும் எப்படி இருந்தது என்பதை ஈரானுக்கு வெளியில் இருப்பவர்களால் புரிந்துகொள்ள முடியாது. அந்தச் செய்தியைக் கேட்டதும் நீகா, ஷரினா, மாஷாவுக்காக அது உண்மைச் செய்தியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்” என்று வெளிநாட்டு ஊடகத்துக்கு அளித்தப் பேட்டியில் அவர் கூறியுள்ளார். பெரும்பாலான பெண்களின் எண்ணமாக இது இருக்கிறது.
36 ஆண்டுகள் ஆட்சி செலுத்திய உச்ச தலைவர் படுகொலைக்கான மாறுபட்ட கருத்துகள், ஈரான் ஆட்சியில் ஏதோ பெரியளவில் குறைபாடுகள் இருந்ததை பிரதிபலிப்பதாகவே ஊடகங்கள் சில கூறுகின்றன.
அண்மையில் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹெச்ஆர்ஏஎன்ஏ (HRANA) என்ற மனித உரிமைகள் குழு, ஈரானில் சமீபத்தில் நடந்த மக்கள் புரட்சியில் 7,000 பேர் கொல்லப்பட்டதாகவும், பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது.
இந்த நிலையில்தான் ஈரானின் இளம் மருத்துவர் ஒருவர் அளித்த ஊடகப் பேட்டியில், “என் வாழ்வின் மிகச் சிறப்பான சனிக்கிழமை இரவு இது!” என்று கூறியது போன்ற படுகொலைக்கு நெக்குருகும் குரல்களையும் கேட்க முடிகிறது.
அதேவேளையில், காமேனியின் படுகொலையால் மற்றொரு தரப்பு மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக நிற்கின்றனர். “அமெரிக்கா, இஸ்ரேலை மரணம் ஆட்கொள்ளட்டும்,” என்ற கோஷங்களை என்கெலாப் சதுக்கத்தில் கேட்க முடிந்தது.
ஈரான் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் “ஈரான் உச்ச தலைவர் படுகொலைக்கு பழிவாங்குவோம். இஸ்லாம் மதத்துக்காகவும் எனது இமாம், காமேனிக்காகவும் என் உயிரையும் கொடுப்பேன். யூத சாம்ராஜ்ஜியமும், ட்ரம்ப்பும் இதற்கு மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்” என்று சூளுரைத்தார்.
காமேனிக்கு அஞ்சலி செலுத்த திரண்ட ஈரானியர்கள்!
“இராக்கில் என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியும். இங்கே குழப்பங்கள் வேண்டாம், ரத்தம் ஓட வேண்டாம். எனக்கு இஸ்லாமிய குடியரசு போதும்” என்றார் இன்னொருவர்.
ஈரானுக்கு வெளியே இருக்கும் இளம்பெண் ஒருவர், “என் தாய் 2022 போராட்டத்தில் உயிரிழந்தார். காமேனி கொல்லப்பட்ட இன்றைய நாள் அழகான நாள். என்னைப் போல் உறவுகளை இழந்த எனது சொந்தங்கள், நட்புக்கள் அனைவரும் இந்த நாளுக்காகக் காத்திருந்தோம்” என்று கூறினார்.
அமெரிக்கா, இஸ்ரேல் சாதித்தது என்ன?
‘இந்த உலகின் தீய மனிதர்களில் ஒருவரான ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டுவிட்டார். ஐஆர்ஜிசி தலைமையகம் அழிக்கப்பட்டது. பாம்பின் தலை வெட்டப்பட்டுவிட்டது’ என்று அமெரிக்கா தொடர் வெற்றி முழக்கங்களை வெளியிடுகிறது. ஆனால், ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது.
முந்தைய காலங்களிலும் ராணுவ தாக்குதல்கள் மூலம் ஈரானை அடிபணிய வைக்க முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால், ஈரான் அப்போதெல்லாம் வீறு கொண்டு மீண்டெழுவது நடந்துள்ளது. அதுதான் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது எனக் கூறுகிறார் புவி அரசியல் விமர்சகரான வில் ஸ்க்ரைவர்.
வில் ஸ்க்ரைவர். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பகிர்ந்த பதிவில், “ஈரானுக்கு எதிரான உக்கிரமான போரை அமெரிக்கா - இஸ்ரேல் நீண்ட நாட்கள் நீட்டிக்க வாய்ப்பில்லை. இரு தரப்புக்கும் சேதம் அதிகமாக இருக்கும். ஆனால் அமெரிக்காவுக்கு மிகக் கடுமையான போர்த் தளவாடப் பற்றாக்குறை ஏற்படக் கூடும். அதிகபட்சம் இந்த உக்கிரம் 15 நாட்கள் நீடிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
அதன் விளைவாகத்தான் ஈரான் தனது பதிலடியை இஸ்ரேல், அமெரிக்காவுக்கு மட்டும் தரவில்லை. அமெரிக்காவுக்கு ஆதரவான கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் நிகழ்த்தியுள்ளது.
“உச்ச தலைவர் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்பதால்தான் அவர் வீரமரணமடைந்தால் யார் தலைமையேற்க வேண்டும் உள்பட அனைத்து முடிவுகளையும் முன்கூட்டியே ஈரான் எடுத்து வைத்திருந்தது” என்று நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் ஹலிபா கூறியது ஈரானின் மீண்டெழும் தன்மைக்கு ஒரு சாட்சி என்கின்றனர் சர்வதேச போர் ஆய்வாளர்கள்.
ஈரான் காலங்காலமாக பல படையெடுப்புகளையும், தாக்குதல்களையும் சந்தித்த நாடுதான். இப்போதைய இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல் சேதத்தை, இழப்பை ஏற்படுத்துமே தவிர, அதைப் பணிய வைக்காது என்று கணிக்கின்றனர் சர்வதேச ஆய்வாளர்கள்.
ஈரானின் உள்ளே இருக்கும் ஆதரவும், வெறுப்பும் அவர்களின் ஆளுகைக்கு உட்பட்டதே என்பதை உலக நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்கள் அறிவுரை கூறுகின்றனர்.