வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் - உஷா பாலா சிலுகுரி தம்பதியருக்கு 4-வது குழந்தை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் நலமுடன் உள்ளதாக ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மேரிலாந்தின் பெதஸ்தாவில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு அலெக் நீல் வான்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
ஏற்ககெவே, இந்தத் தம்பதிக்கு ஈவான் (9 வயது), விவேக் (6 வயது) என்ற இரண்டு ஆண் குழந்தைகளும், மிராபெல் (4 வயது) என்ற பெண் குழந்தையும் உள்ளது.
நான்காவது குழந்தை பிறந்ததை அடுத்து, ஜே.டி.வான்ஸ் - உஷா வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ‘எங்களுக்கு அலெக் நீல் வான்ஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். உஷாவும் குழந்தையும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளனர். தங்கள் குட்டித் தம்பியைப் பார்க்க எங்கள் மற்ற குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
வால்டர் ரீட் மருத்துவ மையம் மற்றும் வெள்ளை மாளிகை மருத்துவப் பிரிவைச் சேர்ந்த சிறந்த ராணுவ மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் எங்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்தனர். எங்கள் குடும்பத்துக்காக அவர்கள் செய்த அனைத்துக்காகவும் நாங்கள் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்’ என தெரிவித்துள்ளனர்.
இந்தக் குழந்தையின் பிறப்பு அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஓர் அரிதான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. பதவியில் இருக்கும்போதே அமெரிக்க துணை அதிபருக்கு குழந்தை பிறப்பது கடந்த 150 ஆண்டுகளில் இதுவே முதல்முறை. இதற்கு முன், ஸ்கைலர் கோல்ஃபாக்ஸ் என்பவர் அமெரிக்க துணை அதிபராக இருந்தபோது அவருக்கு குழந்தை பிறந்தது. 1870-ம் ஆண்டு பிறந்த அந்த குழந்தைக்கு ஸ்கைலர் கோல்ஃபாக்ஸ் III என பெயரிடப்பட்டது. அதற்கு முன்பாக, ஜான் சி கால்ஹவுன் என்பவர் அமெரிக்க துணை அதிபராக இருந்தபோது அவருக்கு வில்லியம் என்ற மகன் 1829-ல் பிறந்தான்.
தற்போது ஜே.டி. வான்ஸ்க்கு 41 வயது ஆகிறது. உஷாவுக்கு 40 வயதாகிறது. ஆந்திரப் பிரதேசத்தை பூர்விகமாகக் கொண்ட உஷாவின் பெற்றோர், அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தை அடுத்து அங்கேயே அவர் வளர்ந்தார். யேல் சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது அவரும் ஜே.டி. வான்ஸூம் நண்பர்களானார்கள். பின்னர், 2014-ல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.