ஜே.டி. வேன்ஸ் மற்றும் முகம்மது பாகர் கலிபா

 
உலகம்

அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஜே.டி. வேன்ஸ், முகம்மது பாகர் கலிபா இஸ்லாமாபாத் வருகை

மோகன் கணபதி

இஸ்லாமாபாத்: மேற்காசியாவில் நடைபெற்று வரும் மோதலுக்கு முடிவு கட்டும் நோக்கில் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான அமெரிக்க குழுவினரும், நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது பாகர் கலிபா தலைமையிலான ஈரான் குழுவினரும் இஸ்லாமாபாத் வந்தனர்.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கின. இதில் அந்த நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உட்பட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். பதிலுக்கு இஸ்ரேலின் முக்கிய நிலைகளை குறிவைத்தும், அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகளை குறிவைத்தும் ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய கடல் வழியான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. இதனால், சர்வதேச அளவில் இந்த போர் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

          

போரை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சியை அடுத்து, இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தத்துக்கு கடந்த 8-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புக்கொண்டார். மேலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா பங்கேற்கும் என்றும் ட்ரம்ப் அறிவித்தார்.

ஈரானும் இரண்டு வார கால போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டது. எனினும், லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தியதால் அதிருப்தி அடைந்த ஈரான் பேச்சவார்த்தையில் பங்கேற்க இயலாது என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து லெபனான் மீதான தாக்குதலை நிறுத்திவைக்குமாறு ட்ரம்ப் விடுத்த வேண்டுகோளை இஸ்ரேல் ஏற்றது. இதனையடுத்து, பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள ஈரான் முன்வந்தது.

அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினர் இஸ்லாமாபாத் வந்துள்ளனர். இதேபோல், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது பாகர் கலிபா தலைமையிலான குழுவினரும் இஸ்லாமாபாத் வந்துள்ளனர். இரு தரப்பினரையும் பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தர், நாடாளுமன்ற சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக், ராணுவத் தலைமைத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி ஆகியோர் வரவேற்றனர்.

இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவை அமெரிக்கா எதிர்பார்க்கிறது. அமெரிக்காவை ஏமாற்ற ஈரான் செய்யும் எந்த ஒரு முயற்சிக்கும் உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். முன்னதாக, அமெரிக்கா ஈரானுக்கு 15 அம்ச திட்டத்தை நிபந்தனையாக முன்வைத்தது. பதிலுக்கு ஈரானும் 10 அம்ச திட்டத்தை அமெரிக்காவுக்கு நிபந்தனையாக முன்வைத்தது. இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT