நிலநடுக்கத்தால் சேதமடைந்த வணிக வளாகம்
டோக்கியோ: ஜப்பானின் தெற்குப் பகுதியான குமாமோட்டா மாகாணத்தில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. நிலநடுக்கம் காரணமாக இடிந்து விழுந்த வணிக வளாகத்தில் பலர் சிக்கிக்கொண்ட நிலையில், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
குமாமோட்டோ மாகாணத்தில் சுமார் 7 லட்சம் மக்கள் வசிக்கும் மத்திய கியூஷு தீவின் மிகப் பெரிய நகரமான குமாமோட்டோவுக்கு தெற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்துள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலைகள் சேதமடைந்தன. வணிக வளாகம் ஒன்று பகுதி அளவில் இடிந்து விழுந்தது. இதில், பலர் சிக்கிக்கொண்ட நிலையில், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என்று காவல்துறை கூறியதாக டிபிஎஸ் ஒளிபரப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
நிலநடுக்கத்தை அடுத்து டோக்கியோவில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜப்பான் பிரதமர் சனாயே டகாய்ச்சி, “10 ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அதே பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் மக்கள் காயமடைந்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. சில பகுதிளில் மின்வெட்டு மற்றும் தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளன. கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வது உட்பட தங்களை தற்காத்துக்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால், மீட்புப் பணிகளுக்கு உதவ 3,600 ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மூன்று லட்சம் மக்கள் முகாம்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை ஒன்று தெரிவித்துள்ளதாக பொது ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின்போது அதிவேக ரயிலில் பயணித்த பலரும் காயமடைந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்துக்குப் பிறகு ஏற்பட்ட வெடிவிபத்தால் ஏயோன் வணிக வளாகத்துக்குள் பலர் சிக்கிக்கொண்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என்று காவல்துறை கூறியதாக டிபிஎஸ் ஒளிபரப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
நிலநடுக்கத்துக்குப் பிறகு வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெடிவிபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் ஏயோன் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.