உலகம்

“இத்தாலியில் நீண்டகாலம் பதவி வகித்த பிரதமர்” - ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

வெற்றி மயிலோன்

புது டெல்லி: “இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இத்தாலிய வரலாற்றில், தொடர்ந்து நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்தவர்” என ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

49 வயதான ஜார்ஜியா மெலோனி, 2022 அக்டோபர் 22 முதல் இத்தாலியின் பிரதமராகப் பதவி வகித்து வருகிறார். வியாழக்கிழமையுடன் அவர் பதவியேற்று 1,413 நாட்கள் நிறைவடையும் நிலையில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இத்தாலியில் தடையின்றி நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற சாதனையை அவர் படைத்தார். இப்பதவியை வகிக்கும் முதல் பெண்மணியும் இவரே ஆவார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “இத்தாலியின் போருக்குப் பிந்தைய வரலாற்றில், மிக நீண்ட காலம் தொடர்ந்து பிரதமராகப் பணியாற்றும் பெருமையைப் பெற்ற எனது நண்பர் பிரதமர் மெலோனிக்கு வாழ்த்துகள். இந்த மைல்கல், அவரது தலைமையின் மீது இத்தாலிய மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் உறுதியையும் பிரதிபலிக்கிறது.

இந்தியா-இத்தாலி இடையிலான சிறப்பு உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் மெலோனியின் நட்பு முக்கிய பங்காற்றியுள்ளது. நமது நாட்டு மக்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்க தங்களின் நெருக்கமான ஒத்துழைப்பைத் தொடர நான் ஆவலாக உள்ளேன். வரும் ஆண்டுகளிலும் அவர் தொடர்ந்து வெற்றிபெற எனது நல்வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT